கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை ரூபாய் நோட்டுக்களில் வெளியிட பரிசீலனை செய்யப்படுகிறது.
வங்க மொழி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அறியப்படும் 11-ஆவது இந்திய குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சிடுவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது.
தற்போது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் மட்டுமே இடம் பெற்று இருப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், ரூபாய் நோட்டுக்களில் மற்ற தேச தலைவர்களின் படங்களையும் இடம் பெற செய்வது பற்றி முதல் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
அப்துல் கலாம் படம்:
ரூபாய் நோட்டுகளில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படம் எவ்வித மாற்றமும் இன்றி இடம்பெற்று இருக்கும். மேலும் ரூபாய் நோட்டில் உள்ள வாட்டர் மார்க் எனப்படும் மறைவாக தெரியும் வகையில் மகாத்மா காந்தியின் படம் கூடுதலாக இடம்பெற்று இருக்கிறது.
வாட்டர் மார்க் இடத்தில் வங்க மொழி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை ரூபாய் நோட்டுக்களின் புதிய சீரிசில் வெளியிட ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகின்றன.
வாட்டர்மார்க் டிசைன்:
ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வெளியீட்டு அமைப்பு ஆகியவை இணைந்து மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு “வாட்டர்மார்க்” படங்களை டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் திலீப் டி சகானிக்கு அனுப்பி இருக்கிறது. இவர் தான் இரண்டு படங்களில் ஒன்றை தேர்வு செய்து இறுதி ஒப்புதலை பெற அரசுக்கு பரிசீலிப்பவர் ஆவார்.
புதிய வாட்டர் மார்க் கொண்ட படங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளன. எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும், தற்போது அவருக்கு படங்கள் அனுப்பப்பட்டு இருக்கும் காரணத்தால் இந்திய ரூபாய் நோட்டுக்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் படங்கள் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.