ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது இந்தியாவை பாகிஸ்தான் ஆக்குவதற்கான முயற்சி என ரவிக்குமார் எம்.பி. காட்டம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடரின், சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்யப் போவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கும் இந்தியா முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பாஜக செய்துவரும் முயற்சி அதிகாரத்துவத்துக்கு வழிவகுப்பது மட்டுமின்றி மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டவும், கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்ப்பதற்கும் காரணமாகிவிடும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படுவது குறித்த திடீர் அறிவிப்பு வெளியானதிலிருந்து அதற்குப் பின்னால் இருக்கும் நோக்கம் எதுவாக இருக்கும் எனப் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்யப் போகிறது என ஒரு வதந்தி வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதற்கும் பாராளுமன்றம் சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என பாஜக கடந்த 20 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறது. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே வாக்காளர் பட்டியல்’ என இருக்கவேண்டுமென்று 29.01.2018 அன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
“அரசு நிர்வாகம் குறித்து அக்கறையுள்ள குடிமக்கள் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் அடிக்கடி நடக்கும் தேர்தல்களைப் பற்றி கவலை கொண்டுள்ளனர். அப்படி தேர்தல் நடப்பதால் நாட்டின் பொருளாதாரமும், வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றன. அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் மனிதவளத்தின் மீது பெருஞ்சுமையை சுமத்துவது மட்டுமின்றி தேர்தலின்போது நடைமுறைப்படுத்தப்படும் நடத்தை விதிகளால் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் தடைபடுகிறது. ஆகவே, பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் விவாதித்து ஒரு கருத்தொற்றுமையைக் காணவேண்டும்” என ராம்நாத் கோவிந்த் பேசியிருந்தார்.
குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இரண்டாவது முறையாக தலித் ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் வர்ணித்தன. இப்போதைய குடியரசுத் தலைவர் பேசியிருப்பதை முதல் தலித் குடியரசுத் தலைவரான கே.ஆர்.நாராயணன் 2001 ஆம் ஆண்டு ஆற்றிய குடியரசு தின உரையோடு நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்ற யோசனை நமது நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தை சீர்திருத்துவதற்காகத் தற்போதைய குடியரசுத் தலைவரோ பிரதமரோ தாங்களே சிந்தித்துக் கண்டுபிடித்த ‘ ஒரிஜினல் ஐடியா’ அல்ல. 1999-2004 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்போது துணைப் பிரதமராக இருந்த எல்.கே.அத்வானி இந்த யோசனையை முன்வைத்தார். அத்துடன் நிற்காமல் இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் பேசினார்.
அத்வானியின் நோக்கத்தில் இருந்த ஆபத்தைப் புரிந்துகொண்ட அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், 2001 ஆம் ஆண்டு குடியரசு தின உரையில் அத்வானிக்கு பதிலளிக்கும் விதமாக தனது உறுதியான கருத்தை வெளிப்படுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தில் வயது வந்தோருக்கு வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி, ‘ இந்த நாட்டை ஆள்வதற்கான அதிகாரம் மேட்டிமைத்தனம் கொண்ட சிறு குழுவின் பொறுப்பில் விடப்படக்கூடாது. அது ஒட்டுமொத்த மக்களின் கையில் தரப்படவேண்டும் என நமது அரசியலமைப்புச்சட்ட பிதாமகர்கள் மக்கள் மீது வைத்த நம்பிக்கையை “பெருமையோடு அவர் நினைவுகூர்ந்தார்.
’ஆட்சியின் ஸ்திரத்தன்மை என்பதைவிட ஆட்சியாளர்கள் பொறுப்போடு ஆட்சி செய்கிறார்களா என்பதே முக்கியமானது’ என அம்பேத்கர் பேசியதை எடுத்துக்காட்டிய அவர், அதனால்தான், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கவும், மறைமுகத் தேர்தல் முறையைப் பின்பற்றவும் 1935 ஆம் வருடத்தைய இந்திய அரசு சட்டத்தில் சொல்லப்பட்ட திட்டத்தை அவர்கள் நிராகரித்தனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அயூப் கானோ ‘வழி நடத்தப்படும் ஜனநாயகம்’ என்ற பெயரில் அதிபர் ஆட்சி முறையை பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தினார். இன்று, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டே ராணுவ ஆட்சிமுறையின் தந்தையான அயூப் கானின் அரசியல் சிந்தனைகளை நாம் அமல்படுத்தப் பார்ப்பது வரலாற்றின் நகை முரண்” என கே.ஆர்.நாராயணன் வேதனையோடு குறிப்பிட்டார்.
அத்வானியின் அதிபர் ஆட்சி கனவை அந்த உரைதான் கலைத்தது. 1952 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல்கள் நடத்த ஆரம்பித்ததிலிருந்து 1971 ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற / சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில்தான் நடத்தப்பட்டு வந்தன. காங்கிரஸில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்திரா காந்தியின் கரம் வலுவடைந்த போதுதான் ஓராண்டுக்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதும், மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்ததும் வேறு வேறு காலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டன.
ஒரே நேரத்தில் தேர்தல் என்ற யோசனையை சட்ட ஆணையம் ஆதரித்திருப்பதாக கூறும் பாஜகவினர் அதை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் எதிர்த்துள்ளனர் என்ற உண்மையைக் கூறுவதில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் என்ற திட்டத்தை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ கடுமையாக எதிர்த்தார். ’இந்த யோசனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று குறிப்பிட்ட லிங்டோ இப்படித் தேர்தலை நடத்துமளவுக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியும்கூட அதேவிதமாகத்தான் கருத்து தெரிவித்துள்ளார், ” 1998 ஆம் ஆண்டு நடந்ததைப்போல நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மத்திய அரசு தோற்றுப்போனால் பாராளுமன்றம் கலைக்கப்படும்போது அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைப்பார்களா? அது சாத்தியமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யார் இந்த ஜெயா வர்மா சின்ஹா? ரயில்வே வாரிய வரலாற்றில் முதல் பெண் தலைவர்!
அடிக்கடி தேர்தல் வருவது மக்கள்மீதான சுமையை அதிகரிக்கிறது, வளர்ச்சியைப் பாதிக்கிறது என்று பாஜகவினர் வருத்தப்படுவது உண்மையென்றால் தங்களது ஆட்சிக்காலத்தில் மாநில அரசுகளைக் கலைத்து அங்கே தேர்தல்களைத் திணித்தது ஏன்?
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் குறித்த ஷரத்துகளை உருவாக்குவதற்கென அமைக்கப்பட்ட குழு தேர்தல் நடத்துவதில் நிர்வாகத் துறையின் (Executive) தலையீட்டைத் தவிர்க்கும் பொருட்டு அதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. தேர்தல் என்பதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்ட அரசியலமைப்புச் சட்ட அவை, தேர்தல்களை நடத்தும் பொறுப்பை தன்னாட்சி கொண்ட ஒரு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கெனவே தேர்தல் ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கியது. தேர்தல்கள் எப்போதோதான் நடக்க போகின்றன. எனவே ஒரு நிரந்தரத் தேர்தல் ஆணையர் மட்டும் போதும். தேவையென்றால் மேலும் சில ஆணையர்களை நியமித்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்தை அம்பேத்கர் முன்மொழிந்தபோது அதில் திருத்தம் கொண்டு வந்து பேசிய பேராசிரியர் ஷிபன் லால் சக்ஸேனா என்ற உறுப்பினர், “ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் என அமெரிக்காவில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதுபோல நாம் ‘நிர்ணையிக்கப்பட்ட கால அளவை’ (Fixed Term ) விதிக்கவில்லை. எல்லா மாகாணங்களும் உள்ளடக்கப்பட்டால் இந்தியாவில் சுமார் முப்பது மாநிலங்கள் உருவாகும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் அந்த அரசு பதவி விலக வேண்டும் என நமது அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. எனவே மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமான தேர்தல்கள் வெவ்வேறு காலங்களில் நடக்கும். முதலில் பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு வேண்டுமானால் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கலாம். அதன் பின்னர் தொடர்ந்து ஆங்காங்கே தேர்தல்கள் நடந்து கொண்டுதானிருக்கும். எனவே மூன்று அல்லது ஐந்து தேர்தல் ஆணையர்களை நியமிக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.
அரசியலமைப்புச் சட்ட அவையில் நடந்த விவாதத்தை வைத்துப் பார்க்கும்போது நமக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன:
1) அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது முன்னோர் தேர்தல் என்பதை மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரித்தார்கள். அதில் நிர்வாகத் தலையீடு இருக்கக்கூடாது எனக் கருதினார்கள்.
2) அடிக்கடி தேர்தல் வரும் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அதை எதிராக அவர்கள் பார்க்கவில்லை. ஆரோக்கியமானதாகவே கருதினார்கள்.
இந்த உண்மை பாஜகவினருக்குத் தெரியாத ஒன்றல்ல. அப்படியிருந்தும் ஏன் அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்? ஏனெனில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திப் பாராளுமன்றம் / சட்டமன்றங்களின் ஆயுட்காலத்தைக் குறிப்பிட்ட ஆண்டுகள்வரை மாற்றவே முடியாது எனக் கொண்டு வருவதன்மூலம் தற்போதுள்ள பாராளுமன்ற ஜனநாயகமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும், மக்களின் கையில் உள்ள வாக்குரிமை என்னும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அதை நிர்வாக அதிகாரத்தின் கீழ் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
நாடாளுமன்றத்துக்கும் இந்தியா முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பாஜக செய்துவரும் முயற்சி அதிகாரத்துவத்துக்கு வழிவகுப்பது மட்டுமின்றி மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டவும், கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்ப்பதற்கும் காரணமாகிவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 16 சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்துள்ளது. அதில் வாக்களித்த 77 சதவீதம் பேர் நாடாளுமன்றம் சட்டமன்றம் இரண்டுக்கும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1999ல் இந்தப் போக்கு 68 சதவீதமாக இருந்தது, 2014 ல் அது 86 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்சனைகளே முதன்மை பெறும். அதில் தேசிய கட்சிகளே மேலாதிக்கம் செலுத்தும். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கட்சிகளும், மாநில நலன்களை முன்னிறுத்தும் கட்சிகளும் ஓரங்கட்டப்படும். இது ஜனநாயகம் என்பது அடித்தள மக்களை நோக்கிப் பரவலாவதற்குத் தடையாக அமைந்துவிடும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவை முற்றாக அழித்துவிடும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.