கோதாவுல குதிச்சிட்டாருங்கோ…!! -நாராயணசாமிக்கு எதிராக களமிறிங்கிய ரங்கசாமி

First Published Nov 9, 2016, 11:16 PM IST
Highlights


புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி இன்றுபிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், நெல்லித்தோப்பு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர் உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக, விசிக, மமக, முஸ்லிம் லீக், புதிய நீதிக்கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிமுக தரப்பில் கட்சி வேட்பாளர் ஓம்சக்திசேகர் மற்றும் தமிழக அமைச்சர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்து வந்தனர்.

கடந்த 2ம் தேதி திடீர் திருப்பமாக எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தது. இரு துருவங்களான ரங்கசாமி-நாராயணசாமி: புதுச்சேரியை பொருத்தவரை காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் நேர் எதிராக இருந்து வருகிறது. அதுபோல அதிமுக, திமுகவும் இருந்து வருகிறது.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. அதேபோல காங்கிரஸை எதிர்த்து களம் இறங்கியுள்ள அதிமுகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி இன்றுகாலை 9 மணியளவில் பிள்ளைத்தோட்டத்தில் உள்ள ஆனந்த முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு, அதன்பின்ன அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

கடந்த 2011 - 16ம் ஆண்டு வரை என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது, மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி, புதுச்சேரிக்கான மத்திய அரசு நிதியுதவியை வராமல் தடுத்து விட்டார் என ரங்கசாமி குற்றம்சாட்டினார். மேலும் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நாராயணசாமியை தோல்வியுற செய்தார்.

தற்போது நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் நாராயணசாமிக்கு எதிராக ரங்கசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால் தேர்தல் களம் மேலும் சூடு பிடித்து அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!