தேர்தலில் போட்டி... ரஜினி பட நாயகி திடீர் முடிவு!

By Asianet TamilFirst Published Feb 6, 2019, 12:15 PM IST
Highlights

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தன் பேரனை நிறுத்த முன்னாள் பிரதமர் தேவகவுடா முடிவு செய்துள்ள நிலையில், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதாவை வேட்பாளராக அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தன் பேரனை நிறுத்த முன்னாள் பிரதமர் தேவகவுடா முடிவு செய்துள்ள நிலையில், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதாவை வேட்பாளராக அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த ஆண்டு அம்பரீஷ் மரணமடைந்துவிட்ட நிலையில், அந்தத் தொகுதியில் வரும் நாடாளுமன்றத் தொகுதியில் அவரது மனைவியும் நடிகையுமான சுமலதா போட்டியிட முடிவு செய்திருக்கிறார். அவரை அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்த வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுமலதாவை களமிறக்க காங்கிரஸ் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்தத் தொகுதியில் தனது பேரனும் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் கவுடாவை நிறுத்த தேவவுகடா திட்டமிட்டிருக்கிறார். இதேபோல இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யாவும் மண்டியாவில் போட்டியிட இந்த முறை தீவிரம் காட்டிவருகிறார். 

மாண்டியா தொகுதியில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டிவரும் நிலையில், இந்தத் தொகுதியில் தான் போட்டியிடப் போவது உறுது என்று சுமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் மண்டியாவை தவிர வேறு தொகுதியிலும் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தத் தொகுதியில் என் கணவர் அம்பரீஷ் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். அம்பரீஷுக்கு மாண்டியா தொகுதி தாய்வீடு போன்றது. அம்பரீஷின் மறைவுக்கு பிறகு மண்டியா மக்கள்தான் எனக்கு ஆதரவாக இருந்துவருகிறார்கள். 

அம்பரீஷின் ஆதரவாளர்கள் என்னை தினமும் சந்தித்து மண்டியாவில் போட்டியிட வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டே அங்கு போட்டியிட முடிவெடுத்துள்ளேன். ஒருவேளை தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால், நிச்சயம் சுயேச்சையாகப் போட்டியிடுவேன்” என்று சுமலதா தெரிவித்துள்ளார். நடிகை சுமலதா தமிழில் முரட்டுக்காளை, கழுகு போன்ற படங்கலில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தவர்.

click me!