எதிர்க்கட்சிகள் மம்தாவுக்கு ஆதரவு.. இடதுசாரிகள் பாஜக நடவடிக்கைக்கு ஆதரவு?

By Asianet TamilFirst Published Feb 5, 2019, 5:01 PM IST
Highlights

சிபிஐ-க்கு எதிராகவும் மோடி அரசுக்கு எதிராகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ள போராட்டத்தை அகில இந்திய அளவில் பல எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில், இடதுசாரிகள் மம்தாவுக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். 

சிபிஐ-க்கு எதிராகவும் மோடி அரசுக்கு எதிராகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ள போராட்டத்தை அகில இந்திய அளவில் பல எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில், இடதுசாரிகள் மம்தாவுக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். 

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மம்தாவை ஆதரித்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. ஆனால், இடதுசாரிகள் இந்த விஷயத்தில் மம்தாவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. 

மம்தாவின் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “சாராத சிட் பண்ட் முறைகேடு விவகாரத்தில் திரிணாமூலுடன் இணைந்து மூளையாக செயல்பட்ட பாஜகவும் அமைதி காத்தது. 5 ஆண்டுகள் கழித்து இப்போது நாடகமாடுகிறார்கள். இதேபோல ஊழல்வாதிகளைக் காப்பாற்ற திரிணாமூல் காங்கிரஸும் போராட்டம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றுகிறது” என்று தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் திரிணாமூல் காங்கிரஸையும் பாஜகவையும் சேர்த்தே விமர்சனம் செய்தார் சீதாராம் யெச்சூரி. ஆனால், தமிழகத்தில் உள்ள இடதுசாரி தலைவர்கள் மம்தா பானர்ஜியை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இதுபற்றி கருத்து கூறியிருக்கிறார். 

“மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் நிலைமையைப் பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை என்பது பாஜகவை தோற்கடிப்போம் என்பதுதான். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் சாரதா சிட் பண்ட் ஊழலில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் சார்பில் பேரணி நடைபெற்றது. அதை திசைத்திருப்பவே நாடகமாடியிருக்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் முன்னணியில் இருக்கும். மேற்குவங்கத்தில் ஊழலில் சிக்கியுள்ள திரிணாமூல் காங்கிஸ் கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி நாடகமாடுகிறார்” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். 

இதேபோல முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதியும் கருத்து தெரிவித்துள்ளார். “சிபிஎம் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மீதுதான் விசாரணை. விசாரணையில் யாராக இருந்தாலும் பங்கேற்பது ஜனநாயகம்தானே. அது ஒரு மலிவான அரசியல் திசை திருப்பல்” என்று சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சமூக ஊடங்களில் மம்தாவுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

click me!