பட்ஜெட் 2021: கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது - ராஜீவ் சந்திரசேகர்

By karthikeyan V  |  First Published Feb 1, 2021, 6:12 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிலையில், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்வதாக ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
 


2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த பட்ஜெட்டையும், மோடி அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தையும் விதந்தோதி அறிக்கை வெளியிட்டுள்ளார் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்.

அதில், பட்ஜெட் 2021-22 சொல்லும் முக்கியமான மெசேஜ் என்னவென்றால், பல நூற்றாண்டுகளாக இந்தியா சந்தித்துவந்த பொருளாதார சீரழிவுகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதுதான்.

Tap to resize

Latest Videos

undefined

2வது மெசேஜ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு சவால்களை நமது அரசும், மக்களும் இணைந்து மன உறுதியுடன் எதிர்கொண்ட விதம் தான்; அது அபாரமானது. 

கடந்த 10 மாதங்களில் இந்தியா கடும் பாதைகளை கடந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. கொரோனாவின் அதிவேக பரவல், சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பரிசோதனை திறன் ஆகியவற்றின் பற்றாக்குறை, பிபிஇ கருவிகளின் திறன், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புதல், எல்லையில் சீனாவின் அத்துமீறல், லாக்டவுனால் சர்வதேச வர்த்தக தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, அரசியல் கட்சிகளின் தூண்டுதல், நெருக்கடியான சூழலில் சில மாநிலங்கள் ஒத்துழைப்பு கொடுக்காதது, தடுப்பூசி கண்டுபிடிப்பு, உற்பத்தி மற்றும் விநியோகம், பொருளாதார சரிவை மீட்டெடுப்பது என கடந்த 10 மாதங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வென்றுள்ளது.

இத்தனை சவால்களையும் நாம் ஒற்றுமையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு சாதித்து, இப்போது உலகின் அதிவேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளோம். இந்த சவால்களை எதிர்கொண்டு வென்றதற்காக இந்திய அரசாங்கம் வியந்து பார்க்கப்படுகிறது; பிரதமர் மோடியின் தலைமையும் பேசப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டத்தால்தான், கொரோனாவிற்கு பிறகு வேகமான வளர்ச்சியை அடைய முடிகிறது.

சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட், பட்ஜெட் 2021க்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது. பட்ஜெட் முதலில் தற்போதைய மற்றும் எதிர்கால இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சுகாதார உட்கட்டமைப்பு, ஊட்டச்சத்து, தூய்மை, குடிநீர் ஆகிய சுகாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு 2.45 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பட்ஜெட் சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்க் முக்கியத்துவம் அளிக்கிறது. மத்திய அரசின் முதலீடுகளும் சுகாதார வளர்ச்சி திட்டங்களும், இனி எந்தவொரு பெருந்தொற்றும் இந்தியர்களின் உயிரை பறித்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதாக உள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியளிக்கும் விதமான, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமான பட்ஜெட். பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் தான் இந்த பட்ஜெட்டின் ஹைலைட். இந்தியாவை உற்பத்தி துறையில் சக்தி வாய்ந்த நாடாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. பி.எல்.ஐ திட்டங்களின் விளைவாக 2022ம் ஆண்டு முதல், பட்ஜெட் மெகா டெக்ஸ்டைல் ஏற்றுமதி பூங்காக்கள், துறைமுகம் மற்றும் ரயில்வே வளர்ச்சி திட்டங்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தும். சுயசார்பு இந்தியா திட்டம் முழுமையாக கட்டமைக்கப்பட்டால், சர்வதேச அளவில் உற்பத்தி துறையில் சீனாவிற்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கும்.

விவசாயிகளின் நலனுக்கு மோடி அரசு செய்த நன்மைகளையும், வேளாண் துறை நவீனமயம், குறைந்தபட்ச ஆதார விலையில் செய்த சாதனை ஆகியவற்றை நிதியமைச்சர் சுட்டிக்காட்டியதில் மகிழ்ச்சி. மேலும் விவசாயிகளின் நலனுக்காகவும், வருவாயை இரட்டிப்பாக்கவும், வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரிகளின் மூலம் வருவாய் ஈட்டும் ஐடியா அபாரமானது.

பொதுச்சொத்துக்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற தத்துவத்தை இந்த பட்ஜெட் தெளிவுபடுத்துகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு, தற்போது ஜிடிபியில் 9.8 சதவிகிதம் செய்யப்படும் செலவு அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் ஜிடிபியில் 4.5% தான் இருக்கும் எனுமளவிற்கு இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது. இதைவிட சிறந்த வளர்ச்சியுடன் இந்தியா சர்ப்ரைஸ் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

கடந்த 10 மாதங்களில் பெருந்தொற்று காலத்தையும் அது ஏற்படுத்திய சவால்களையும் கடின உழைப்பின் மூலம் ஒரு தேசமாக அனைவரும் இணைந்து கடந்துவந்து, இன்றைக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து, வரும் காலங்களில் 11 சதவிகித வளர்ச்சிக்கு உறுதியளித்த பின்னரும், எதிர்க்கட்சிகள், மோடி அரசின் மீது குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைத்து விமர்சித்துவருகின்றன. ஆனால் அவையெல்லாம் ஒன்றுமே செய்யாது. பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் விளைவாக இந்திய பொருளாதாரம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று ராஜீவ் சந்திரசேகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

click me!