
கேரளாவில் கொச்சி அருகே உள்ள ஒரு என்.சி.சி. முகாமில் ராணுவ அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சில கேடட்டுகள் உணவு கெட்டுப்போனதாக புகார் அளித்தனர். இதையடுத்து ராணுவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மீது அங்கிருந்த சிலர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இரண்டு பேர் ராணுவ அதிகாரியிடம் தகாத முறையில் நடந்து கொள்வதைக் காணலாம். அவரது கழுத்தைப் பிடித்து அடிப்பதாக மிரட்டுகின்றனர். தள்ளுவதையும் காணலாம். அங்கு ஒரு போலீஸ்காரர் இருந்தும், அவர் தலையிடாமல் வேடிக்கை பார்ப்பதையும் வீடியோவில் காணலாம். அவர் அவர்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் இந்தச் சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் சட்டத்தை அமல்படுத்தவும், சீருடை அணிந்தவர்களைப் பாதுகாக்கவும் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இது வெட்கக்கேடானது மற்றும் அடிப்படைக் கடமையை மிக மோசமாக புறக்கணிப்பதாகும். மேலிருந்து கீழ் வரை முதல்வர், உள்துறை அமைச்சர் முதல் உள்ளூர் போலீஸ் வரை." என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுபற்றி பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "கேரளாவில் ஹமாஸுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டைக் காக்கும் மற்றும் சேவை செய்யும், இயற்கை பேரிடர்களில் மக்களைக் காப்பாற்றும் சீருடை அணிந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இது வெட்கக்கேடானது. கேரள காவல்துறையிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களால் உங்கள் வேலையைச் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் வேலையைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த இரண்டு அயோக்கியர்களுடன் 15 நிமிடங்கள் செலவிட விரும்புகிறேன். வெறும் 15 நிமிடங்கள்." என்றார்.
ராஜீவ் சந்திரசேகர்: இரு அயோக்கியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்
ராஜீவ் சந்திரசேகர் தனது இரண்டாவது எக்ஸ் பதிவில் இரண்டு தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதனுடன், "பினராயி விஜயன், இவர்கள் தான் இரண்டு அயோக்கியர்கள், இவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். கொச்சி போலீஸ் மற்றும் கேரள போலீசார் நடத்தும் வழக்கு விசாரணையை நான் நேரில் கண்காணிப்பேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதில், "நீங்களும் உங்கள் அரசாங்கமும் உங்கள் கடமையைச் செய்யவில்லை என்றால், நான் நீதிமன்றத்தை அணுகுவேன். இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயற்சிக்கும் போலீஸ் அல்லது அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு நபர் மீதும் வழக்குத் தொடர அனுமதி கேட்பேன். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கேரளாவில் நீங்களும் காங்கிரசும் பரப்பும் அராஜக கலாச்சாரம் மிகவும் மோசமாகிவிட்டது." என்று கூறியுள்ளார்.