
கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் தொழில்நுட்ப வல்லுநருமான ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் திங்கட்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற பாஜக மாநில கவுன்சில் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பபு வெளியானது. பாஜகவின் கேரள மாநில தேர்தல் பொறுப்பாளரான பிரஹலாத் ஜோஷி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ராஜீவ் சந்திரசேகரை நியமிக்கும் முடிவு கட்சியின் முக்கியக் குழு கூட்டத்தில் மூத்த பாஜக தலைவர் பிரகாஷ் ஜவடேகரால் முன்வைக்கப்பட்டது. ராஜீவ் சந்திரசேகர் மாநில மற்றும் மத்திய தலைவர்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பல மாத ஊகங்களுக்குப் பிறகு, பாஜக மத்திய தலைமை, கேரளாவில் கட்சியை வழிநடத்த தொழில்நுட்ப வல்லுநராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ராஜீவ் சந்திரசேகரை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன்பு இந்த பதவிக்கு மூத்த தலைவர்கள் பரிசீலிக்கப்பட்டனர்.
ராஜீவ் சந்திரசேகரின் தலைமையின் கீழ் அதிக இளைஞர்களையும், நிபுணர்களையும் ஈர்க்க முடியும். இந்த முடிவு பாரம்பரிய வாக்காளர்களைத் தாண்டி கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் ராஜீவ் சந்திரசேகரின் எழுச்சிமிகு பிரச்சாரமும் அவரது பதவி உயர்வுக்கு ஒரு காரணமாக இருந்துள்ளது.
சந்திரசேகர் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பாஜக மத்திய தலைமை அவரை திருவனந்தபுரத்தில் நடந்த முக்கியக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இது தலைமை எடுத்த முடிவின் தெளிவான அறிகுறியாகும். முறையான அறிவிப்புக்கு முன்பு, பிரகாஷ் ஜவடேகர் ராஜீவ் சந்திரசேகருடன் தனியாக ஒரு கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் மாநிலத் தலைவர்களுக்கு தனித்தனியாக முடிவை தெரிவித்தார். முக்கியக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ராஜீவ் சந்திரசேகரின் நியமனம் கேரள பாஜகவில் உள்ள கோஷ்டி பூசலுக்கு எதிராக மத்திய தலைமை ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்டவர் என்று அறியப்படும் சந்திரசேகரின் பதவி உயர்வு, மாநில பிரிவுக்கு ஒற்றுமை மற்றும் செயல்திறனைக் கொண்டுவருவதற்கான தலைமையின் நோக்கத்தை குறிக்கிறது.
மாநில முக்கியக் குழு மற்றும் மாநிலக் குழுவில் பெரிய அளவில் மறுசீரமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மூத்த தலைவர்களுடன் அதிகமான இளம் தலைவர்களும் சேர்க்கப்படுவார்கள்.
ராஜீவ் சந்திரசேகரின் முதல் பெரிய சவால் கேரளாவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை வழிநடத்துவதுதான்.