
நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்ததாக கொலை செய்யப்பட்ட ராஜஸ்தான் டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக நுபுர் சர்மாவுக்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நபிகள் நாயகத்தை அவமதித்த வழக்கு... நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்!!
அந்த வகையில் நுபுர் சர்மாவை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவர், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதை அடுத்து கடந்த 28 ஆம் தேதி அவருடைய கடைக்கு பைக்கில் வந்த 2 வாலிபர்கள், ஒருவன், செல்போனில் படம் பிடிக்க, மற்றொருவன் கடைக்குள் சென்று துணி தைக்க அளவு எடுப்பது போல் பேசி திடீரென தன்னிடம் இருந்த வாளால் கன்னையா லாலின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\
இதையும் படிங்க: நுபுர் சர்மா மீதான உச்ச நீதி மன்றத்தின் கருத்துக்கு எதிராக 15 முன்னாள் நீதிபதிகள் கொந்தளிப்பு.. பகீர் கடிதம்.
இந்த கொலையை செய்த ரியாஸ் அக்தர், கோஸ் முகமதுவை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், கன்னையா லால் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு ரூ.51 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். அதுமட்டுமின்றி கொலை செய்யப்பட்ட டெய்லர் கன்னையா லால் மகனுக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், கொல்லப்பட்ட கன்னையா லாலின் மகன்கள் யாஷ் டெலி, தருண் டெலி ஆகியோருக்கு அரசு வேலை வழங்க ராஜஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.