
கேரள மாநிலத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கிறது கன மழை. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் தாழ்வான பகுதிகளில் நீர் பெருகியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முக்கிய நகரங்களான, கொச்சி, கோட்டயம், பாலக்காடு, கொல்லம் உள்ளிட்ட நகரங்களில் மழை நீர் பெருகியுள்ளது. பாலக்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தன் வீட்டின் அருகே, நீர் நிரம்பியிருந்த கிணறில் விழுந்து 8 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். மழையின் காரணத்தால், மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை இன்று விடுமுறை அளித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
திங்கள்கிழமை இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை பல்கலைக் கழகங்கள் ஒத்தி வைத்துள்ளன.
மாநிலத்தின் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், முக்கிய ஐந்து அணைகள் திறக்கப்பட்டுள்ளன. நெய்யார், பெபாரா, கருக்குட்டி, மலங்காரா அணைகளின் கரைப் பகுதிகளில் உள்ள இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் நீர்மட்டம் 126 அடியாக உயர்ந்துள்ளது. தேக்கடியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே பாறைகளும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளதால், கேரளத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.