“பார்கோடு” டிக்கெட், தானியங்கி கதவு... அதிநவீன வசதிகளுடன்  அசத்தும் ரெயில்வே…

First Published Jul 9, 2017, 5:54 PM IST
Highlights
Railways to install bar coded flap gates at stations


மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருப்பதைப் போன்று பார்கோடு டிக்கெட், தானியங்கி கதவுகள் ஆகியவற்றை அனைத்து ரெயில் நிலையங்களிலும் அமைக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டிக்கெட் பரிசோதனை செய்வது எளிதாகும், டிக்கெட்டர் பரிசோதகர்களுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது இல்லை.
 
இந்த பார்கோடு டிக்கெட் முறை, தானியங்கி கதவுகள் முறை தற்போது சோதனை முயற்சியாக கொல்கத்தா மற்றும் டெல்லி மெட்ரோ  ரெயில் நிலையங்களில் ரெயில்வே துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ரெயில்வே துறையின் சி.ஆர்.ஐ.எஸ். என்ற கணினிப் பிரிவு இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 
ரெயில்வேயின் இந்த திட்டத்தின்படி, முன்பதிவு செய்யப்படாத ரெயில் டிக்கெட்டுகளின் பின்புறம் “கியு.ஆர் கோடு” அச்சிடப்பட்டு இருக்கும். இந்த டிக்கெட்டில் செல்லுபடியாகும் நேரத்துக்குள் தானியங்கி கதவுகள் அருகே டிக்கெட்டை வைத்து நாம் வெளியிலோ அல்லது மீண்டும் உள்ளே வந்து கொள்ளலாம். தானியங்கி கதவு முறை டிக்கெட்டில் உள்ள பார்கோடை சரிபார்த்து பயணிகள் விரைவாக கடந்து செல்ல உதவும்.
 
இது குறித்து ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த திட்டம் முழுவீச்சில் அடுத்த 3 மாதங்களில் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் சிறப்பாக செயல்படும் பட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கலெக்டர்கள் பற்றாக்குறை தீர்ந்துவிடும்.

டெல்லி, கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், ரெயில்வேயில் இதுவரை சோதித்து பார்க்கப்படவில்லை. மெட்ரோ நிலையத்தை பொருத்த வரை பயணிகள் டிக்கெட் இல்லாமல் வெளியே செல்ல முடியாத அளவுக்கு சுற்றுச்சுவர் இருக்கும். ஆனால், ரெயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாமல் கூட பயணம் செய்து ஒருவர் தப்பித்து செல்ல முடியும்.

ஆதலால், இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ரெயில்நிலையங்கள் முழுவதும் சுற்றுச்சுவர் அல்லது இரும்புவலை அடித்து வேலி அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் டிக்கெட் இல்லாதவர்கள் தப்பி வெளியே செல்லமுடியாது. மற்றவகையில், தானியங்கி கதவு மற்றும் பார்கோட் டிக்கெட் போன்றவற்றை அமைக்க ரெயில் நிலையம் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் செலாவாகும்” எனத்தெரிவித்தார். 

click me!