மணிப்பூர் டூ மும்பை: ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்ரா நடைபயணம் அறிவிப்பு!

By Manikanda Prabu  |  First Published Dec 27, 2023, 12:04 PM IST

மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா எனும் பெயரில் ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது


காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

இந்த நிலையில், மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா எனும் பெயரில் ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கும் சுமார் 6,200 கிமீ கொண்ட இந்த யாத்திரையானது, அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மார்ச் 20ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளது.

Tap to resize

Latest Videos

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது பேசிய கே.சி.வேணுகோபால், “இந்த யாத்திரை மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உ.பி., ம.பி., ராஜஸ்தான், குஜராத் மற்றும் இறுதியாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 6,200 கி.மீ.  பயணிக்கிறது.” என்றார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்ச்சை: மல்யுத்த வீரர்களை சந்தித்த ராகுல் காந்தி!

முந்தைய பாரத் ஜோடோ நடைபயணம் போலல்லாமல் பாரத் நியாய யாத்ரா பேருந்தில் மேற்கொள்ளப்படும் எனவும், இது பேருந்து யாத்திரை என்றாலும் நடைபயணமும் இருக்கும் எனவும் அவர் கூறினார். யாத்திரையின் நோக்கங்கள் குறித்து பேசிய அவர், பாரத் நியாய யாத்ரா எனும் பெயரிலேயே யாத்திரையின் நோக்கமான நீதி கோரல் இருக்கிறது என்றார். இந்த யாத்திரை இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுடன் தொடர்பு கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.

கிழக்கில் இருந்து மேற்காக செல்லும் இந்த யாத்திரையை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஜனவரி 14ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். “மணிப்பூர் இல்லாமல் நாம் எப்படி யாத்திரை மேற்கொள்ள முடியும்? மணிப்பூர் மக்களின் வலியைக் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும்.” என கே.சி.வேணுகோபால் கூறினார்.

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, 3,970 கிமீ, 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து 130 நாட்களுக்கு மேல் நீடித்து, 2023ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.

யாத்திரையின் முதல் கட்டமாக, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடந்தார். ராகுல் காந்தி யாத்திரையின் தாக்கம் கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களின்போது, அண்மையில் தெலங்கானா தேர்தலிலும் எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!