மக்கள் குரலை நசுக்கும் ஆணவம் பிடித்த மன்னன்! மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட்

By SG BalanFirst Published May 28, 2023, 5:16 PM IST
Highlights

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்திப் போராடும் மல்யுத்த வீரர் வீராங்கனைளை மோசமாக நடத்தியதை ராகுல் காந்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கிச் செல்ல முற்பட்டபோது, டெல்லி காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதனை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாகச் சாடி இருக்கிறார்.

“முடிசூட்டு விழா முடிந்ததும் ஆணவம் மிகுந்த மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சிலர் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை கைது செய்யக் கோருகின்றனர்.

நாடாளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாகக் கருதும் பிரதமர்! ராகுல் காந்தி விமர்சனம்

राज्याभिषेक पूरा हुआ - 'अहंकारी राजा' सड़कों पर कुचल रहा जनता की आवाज़! pic.twitter.com/9hbEoKZeZs

— Rahul Gandhi (@RahulGandhi)

தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் இன்று திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல அவர்கள் புறப்பட்டபோது, டெல்லி காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி கைது செய்தனர். டெல்லி காவல்துறையினர் மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் மோசமாக நடத்துகொள்ளும் வீடியோக்களும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

போராட்டக்காரர்களை ஒடுக்கி, அவர்களை பேருந்துகளில் அடைத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனை எதிர்க்கட்சிகள் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'ஆணவம் பிடித்த அரசன்' என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். மல்யுத்த வீரர்களிடம் போலீசார் நடந்துகொண்ட விதத்தை காட்டும் வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

தன்னை தானே புகழும் சர்வாதிகார பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்: காங்கிரஸ் விமர்சனம்

முன்னதாக, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பற்றி ட்வீட் செய்த ராகுல் காந்தி, புதிய கட்டிட திறப்பு விழாவை பிரதமர் தனது முடிசூட்டு விழாவாக கருதுவதாகக் விமர்சித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 20 கட்சிகள், திறப்பு விழாவைப் புறக்கணித்துள்ளன.

This is how our champions are being treated. The world is watching us! pic.twitter.com/rjrZvgAlSO

— Sakshee Malikkh (@SakshiMalik)

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ட்விட்டரில் காவல்துறையின் ஒடுக்குமுறை வீடியோவைப் பதிவிட்டு, "நமது சாம்பியன்கள் நடத்தப்படும் விதம் இதுதான். உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது"  என்று கூறியுள்ளார்.

தமிழைக் காப்பது தமிழினத்தைக் காப்பதாகும்: ஜப்பானில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

click me!