ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, ஆற்றல் வாய்ந்த ரேவந்த் ரெட்டியின் வியூகம் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது
ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மிசோரம் தவிர எஞ்சிய நான்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 60 இடங்களை தாண்டி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதனையொட்டி, அம்மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நிலவரம்
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, புதிய மாநிலமாக உருவான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார்.
தெலங்கானா மாநில முதல்வராக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருக்கும் கே.சந்திரசேகர ராவ், முதல் ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். முதல் ஆட்சி காலத்தின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே அதாவது 9 மாதத்திற்கு முன்பே ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில் 119 தொகுதிகளில் களம் கண்ட கேசிஆரின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 99 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக உருவெடுத்தது.
இந்த நிலையில், கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறும் எதிர்பார்க்கபட்ட நிலையில், கடும் பின்னடைவை சந்தித்துள்ள. கட்சித் தலைவர் கேசிஆர், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே பின்னடைவை சந்தித்து வருகிறார். கேசிஆர் போட்டியிட்ட கஜ்வெல் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் எட்டலா ராஜேந்தரும், காமரெட்டி தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
கைகொடுத்த பாரத் ஜோடோ
கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 119 இடங்களில், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய கட்சிகள் தலா 7 இடங்களில் வென்றன. ஆளும் பிஆர்எஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.
அந்த தேர்தலில் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 2023 தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட முன்னிலை பெற்று வருகிறது. இதன் மூலம், அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் ஆற்றல் மிக்கவராக பார்க்கப்படும் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியின் வியூகம் ஆகியவையே காரணமாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கனிப்புகளுக்கு முன்பே தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும் என்ற பேச்சுகள் எழத்தொடங்கி விட்டன. மாற்றுக் கட்சியினர், காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என பலரும் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானது அந்த பேச்சுகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி: கமல்நாத் நம்பிக்கை!
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சுமார் 50க்கும் மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். அதுதவிர, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு பெருமளவு கைகொடுத்துள்ளது.
மறைமுகமாக வளர்ந்த காங்கிரஸ்
தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, 2018 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அடுத்த ஆண்டு, மோடி அலை இந்தியாவில் வீசியபோதும், தெலங்கானா அசையாமல் இருந்தது; பாஜகவின் வாக்கு வங்கியும் மாறவில்லை. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 17 இடங்களில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. அத்துடன், உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக அதிகப்படியான இடங்களை கைப்பற்றியது. 2020 ஆம் ஆண்டில், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பாஜகவின் வெற்றி அபரிமிதமானது.
அதேசமயம், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் அம்மாநிலத்தில் யாரும் அசைக்க முடியாத அளவிற்கு வளர்ந்திருந்த கேசிஆரின் பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளிலும் பாஜக ஈடுபட்டது. நாடு முழுவதுமே நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தெலங்கானா மட்டும் விதிவிலக்கல்ல என்ற நிலையில் இருந்தது. அக்கட்சியின் தடுமாற்றம் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜகவை நினைக்கும் பாங்கை உருவாக்கியது.
பாஜகவின் தந்திரங்கள், மாநிலத்தில் வளர்ந்து வரும் அக்கட்சியின் செல்வாக்கு உள்ளிட்டவைகளால் அக்கட்சி மீது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்த கேசிஆர், தங்களது செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து வந்த காங்கிரஸ் கட்சியை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. அதன் விளைவு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிந்தது; இன்றைய முடிவுகளிலும் எதிரொலிக்கிறது.
ஆற்றல் மிக்க ரேவந்த் ரெட்டி
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆற்றல் மிக்க தலைவராக பார்க்கப்படுகிறார். மாணவராக இருந்த போது, ஏபிவிபி உறுப்பினராக இருந்த ரேவந்த் ரெட்டி, ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வாகவும், தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் கேசிஆர் கட்சியின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு கேசிஆர் கட்சியின் இருந்து பிரிந்து காங்கிரஸில் இணைந்த அவர், அக்கட்சியின் மல்காஜ்கிரி தொகுதி எம்.பி.யாக உள்ளார். இளம் தலைவராக மிகவூம் சுறுசுறுப்பாக வலம் வரும் ரேவந்த் ரெட்டிக்கு தேவையான சுதந்திரத்தை கட்சி மேலிடம் வழங்கியதாக தெரிகிறது.
அதன் மூலம், கட்சியை தெலங்கானா மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் ரேவந்த் ரெட்டி வளர்த்துள்ளார். காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் அவர் முதல்வராக வாய்ப்புள்ளது. “நான் மெரிட் கோட்டா; கேசிஆரின் மகன் மேனேஜ்மெண்ட் கோட்டா, என்.ஆர்.ஐ. கோட்டா.” என கேசிஆரின் மகனான கே.டி.ராமாராவை தேர்தல் பிரசாரத்தின்போது ரேவந்த் ரெட்டி விமர்சித்திருந்தார். அதன்படி, மெரிட் கோட்டாவில் சி.எம். ஆகும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.