
மோடி பெயர் தொடர்பான சர்ச்சைகுரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ராகுல்காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதியானது.
இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, அவரது தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. “கடந்த 4-ம் தேதி வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது. அவர் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினராக தொடரலாம்.” என்று மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல அமலாக்கத்துறை தீவிரம்!
அதன்படி, தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டதால், நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி இன்று வருகை புரிந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல், ராகுல் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். மக்களவையில் தனது இருக்கையில் மீண்டும் அமர்ந்து அவை நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார்.