
மோடி ஆட்சியில் ஜனநாயகம் இருண்ட பாதையில் செல்வதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காரிய கமிட்டிக் கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லாததால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி காரியக் கமிட்டி கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
இதில் காரிய கமிட்டியின் உறுப்பினர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி, மோதிலால் வோரா, அகமது பட்டேல், சி.பி.ஜோஷி உள்ளிட்டவர்களும், நிரந்தர அழைப்பாளர்களான ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆர்.கே. தவான் போன்றவர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தலை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்தி முடிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
5 மாநில தேர்தல்
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தர காண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் குறித்தும் காரியக் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
16-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இருண்ட பாதையில் ஜனநாயகம்
காரியக் கமிட்டி கூட்டத்தில் மோடி அரசை கடுமையாக தாக்கி ராகுல் காந்தி பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டில் ஜனநாயகம் இருண்ட பாதையில் செல்கிறது. அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் உள்ளது.
டி.வி.சேனல்கள் மீது நடவடிக்கை, எதிர்க்கட்சியினர் கைது ஆகியவைதான் இந்த அரசாங்கத்தின் சாதனையாகும். மோடி அரசின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது.
தலித்துகள் மீது தாக்குதல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை. பாகிஸ்தானுடனான உறவுகள், காஷ்மீர் விவகாரம் போன்றவற்றிலும் பாஜக அரசின் நிலைப்பாடு சரியில்லை.
தலித்துகள், மற்றும் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து விட்டது. விவசாயிகளின் நிலை இந்த அரசு பொறுப்பேற்ற பின் மோசமடைந்துவிட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. கடந்த 20 மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி மிகவும் சரிந்து விட்டது.
இந்திரா காந்தி நூற்றாண்டு
மோடி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. இதை மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா ஆண்டாகும். இதை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்திரா காந்தி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய பிரதான குழு மற்றும் துணைக் குழுக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
தலைவராக சோனியா நீடிப்பார்
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் சோனியா காந்தி நீடிப்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராகுல் காந்தியை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வது குறித்த முடிவு மேலும் ஒரு ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறையும் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளிப்பது குறித்து கட்சியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், தற்போதைய அரசியல் சூழலில் சோனியா காந்தி தலைமை பதவியில் தொடருவதே நல்லது என கருதுவதாகவும் கூறப்படுகிறது. எனவே ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்குவதை அக்கட்சி ஒத்தி வைத்துள்ளது.