மோடி ஏன் ‘பத்மாசனம்’ செய்வதில்லை தெரியுமா? - ராகுல்காந்தி புதிய விளக்கம்

First Published Jan 11, 2017, 5:30 PM IST
Highlights


நாள்தோறும் யோகா செய்கிறேன் என்று கூறும் பிரதமர் மோடி பத்மாசனம்(அமர்ந்தநிலையில் இருத்தல்) செய்வதில்லை. ஏனென்றால், முறையாக யோகா செய்பவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜன் வேதனா மாநாடு

ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஜன் வேதனை என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு தலைமை ஏற்று பேசிய கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர்மோடியையும் அவரின் அரசையும் கடுமையா விமர்சித்துப் பேசினார்.

பத்மாசனம்

அப்போது மோடி ஆசனங்கள் செய்வது குறிப்பிட்டு ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி யோகா செய்வதைப் பார்த்தேன். பிரதமர் மோடி அனைத்து வகையான ஆசனங்களையும் சிறப்பாகச் செய்தார். ஆனால், அமர்ந்தநிலையில் செய்யப்படும் பத்மாசனத்தை மட்டும் அவர் செய்யவில்லை.

செய்யமுடியாது

நானும் யோகா கற்றுக்கொண்டேன், செய்து இருக்கிறேன். அதில் நான் ஒன்றும் தேர்ந்தவன் இல்லை. என்னுடைய யோகா குரு என்னிடம் கூறுகையில், யோகாவை முறையாக பயிற்சி செய்பவர்கள் மட்டுமே, அமர்ந்தநிலையில் செய்யும் பத்மாசனத்தை எளிதாகச் செய்ய முடியும். யாரெல்லாம் நாள்தோறும் முறையாக ஆசனங்களை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களால் பத்மாசனத்தை செய்ய முடியாது என்று கூறி இருக்கிறார்.

உதாரணம்

மோடியின் செயல்பாடு எதும் முழுமையாக இருக்காது என்பதற்கு இந்த யோகாசனம் உதாரணம். பிரதமர் மோடி எந்த திட்டத்தையும், எந்த செயலையும் ஒழுங்காக, முறையாக செய்யக்கூடியவர் அல்ல என்பதை  இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதனால், யோகா செய்யும் அவரால், பத்மாசனத்தை செய்ய முடியவில்லை.

பிரதமர் மோடியிடம் பொறுப்புணர்ச்சி என்பது கிடையாது பிரதமர் மோடி யோகா பயிற்சியைப் பற்றி அடிக்கடி பேசுகிறார். ஆனால், அவரால் எளிய பத்மானசனத்தைக் கூட செய்ய முடியவில்லை. இதுதான் இவரின் பொறுப்புனர்வு.

தகுதியின்மை

இரண்டாவதாக மோடியின் தகுதியின்மை. ஒரு நிகழ்ச்சியில் மோடி பேசும் போது, மக்களிடம் துடைப்பத்தைக் கொடுத்து, தானும் துடைப்பத்தை கையில் வைத்துக்கொண்டு  நாட்டில் இருந்து ஊழலை எப்படி ஒழிக்கப்போகிறேன் என்று பேசினார்.

பிரதமர் மோடிக்கு துடைப்பத்தை எப்படி கையில் பிடித்து இருந்தால் என்பதை பார்த்து இருக்கிறீர்களா?. மோடி பிடித்திருப்பதைப் போல் பிடித்திருந்தால் ஒருபோதும் நாட்டை சுத்தம் செய்ய முடியாது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!