
ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்ப்பவர்களிடம் அச்சுறுத்தும் அரசியலை பிரதமர் மோடி நடத்துகிறார் என காங்கிரஸ் துணைத் தலைவர்ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட 132 ஆண்டு நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின், டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
யாகம்
நவம்பர் 8-ந்தேதி ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும் எதிராக பிரதமர் மோடி மிகப்பெரிய யாகம் நடத்தியுள்ளார். ஒவ்வொரு யாகத்திலும் சிலரை பலிகொடுத்து இருக்கிறார். அவர் நடத்தும் ஒவ்வொரு யாகமும் சிலருக்கு பலன் அளிக்கும் விதத்தில்தான் இருக்கிறது.
ஒருசதவீத குடும்பம்
ரூபாய் நோட்டு தடை யாகம் என்பது நாட்டில் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும் 50 பணக்கார குடும்பங்களின் நலனுக்காக நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தரமக்கள், சிறுவியாபாரிகள் உள்ளிட்ட பலர் பலிகொடுக்கப்பட்டுள்ளனர். அந்த யாகத்தால் வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு வேதனை ஏற்பட்டுள்ளது.
ஊழல்குற்றச்சாட்டு
ஒரு சிலருக்காக அரசை இயக்கி வருகிறார் மோடி. ஏழை மக்களிடம் இருந்து பணத்தை எடுத்து, குறிப்பிட்ட சிலருக்காக கொடுத்து வருகிறார். பிரதமர் மோடி மீது நான் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் கூறவில்லை.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சாமானியர்கள், ஏழைகள், நடுத்தரமக்கள், நடுத்தரமக்கள், சிறுவியாபாரிகளுக்கு ஆதரவாக இருக்கும், நாட்டின் நலனுக்காக உதவி செய்யும். இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.
அச்சுறுத்தல்
மக்களிடையே வெறுப்பையும், அச்சத்தையும் பரப்பிவரும் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். சிந்தாத்தங்களுக்கு எதிராக போராடி வெல்வோம். மோடியின் கொள்கைகள் மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அச்சத்தையும், வேதனையையும், வெறுப்பாக மாற்ற மோடி முயற்சித்து வருகிறார்.
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால்,மக்களின் நிதிச்சுதந்திரத்தை பறித்து, வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும் என கட்டுப்பாடுகள் விதித்துவிட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.