
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவராக ரகுராம் ராஜனா?
தமிழகத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன்தான் அமெரிக்க பெடரல்வங்கியின் தலைவராக பதவி ஏற்க சரியான மனிதர் என்று சர்வதேச நிதி வாரஏடான பாரன்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ரிசர்வ்(பெடரல்)வங்கியின் தலைவராக தற்போது இருக்கும் ஜேனட் யேலனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிகிறது. அதற்குள் அடுத்த தலைவரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச நிதிவிஷயங்களை வெளியிடும் பத்திரிகையான பாரன்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “ உலகில் உள்ள திறமையான மனிதர்களை விளையாட்டு அணிகள் தங்களுக்கு நியமித்தால், ஏன்ரிசர்வ் வங்கியில் இருந்து தேர்வு செய்யக்கூடாது?. ரகுராம் ராஜன் போன்ற திறமையான நபர்கள் வழிநடத்த சிறந்தவர்கள்.
பெடரல் வங்கியின் தலைவரை தேர்வு செய்ய தகுந்த, திறமையானவர்களை பட்டியலிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது உலகில் உள்ள நாடுகளின் ரிசர்வ் வங்கிகளில் மிகச்சிறந்த நபர்களை தேடி வருகின்றனர். பணவீக்கம் குறித்து துல்லியமாகக் கணித்தவரும், ரூபாய் நோட்டின் மதிப்பை நிலைப்படுத்தியவரும், பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை 50 சதவீதம் உயர்த்தியவருமான ஒருவரை தேர்வு செய்யலாம்.
சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார மந்தம், சிக்கல் ஏற்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரியாகக் கணித்து எச்சரிக்கை செய்தவர் சரியான நபராக இருப்பார் என மறைமுகமாக ரகுராம் ராஜனை குறிபிட்டுள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்கர் அல்லாத நபரான இங்கிலாந்து ரிசர்வ்வங்கியின் தலைவரும் கனடாவில் பிறந்தவருமான மார்க் கார்னேவும் தகுதியானவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பண நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுனராக, மேற்கத்திய நாடுகளைச் சார்ந்தவர் அல்லாத, முதல்நபராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 2005ம் ஆண்டு நடந்த ஆண்டு கூட்டத்தில் அமெரிக்காவில் விரைவில் மிகப்பெரிய நிதிச்சிக்கல் வரப்போகிறது என்பதை கணித்துக்கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதுபோலவே அமெரிக்காவில் நடந்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கடந்த 2013ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜன் சிறப்பாக பணியாற்றினார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தினார், நாட்டின் அன்னியச்செலாவணி கையிருப்பை எப்போது இல்லாத வகையில் அதிகரிக்கச் செய்தால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீட்டை பெருக்கினார், பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பை உயர்த்தி, வர்த்தகத்தை இரட்டிப்பாக்கினார். ஆனால், 2வது முறையாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்காததையடுத்து அவர் தனது பேராசிரியர் பணிக்கு திரும்பினார்.