
நேற்று மாலை அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொற்கோயிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது, கருவறை தடுப்பு கேட்டை தாண்டி உள்ளே குதித்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூல் மற்றும் அருகில் வைக்கப்பட்டிருந்த வைரம் பதித்த வாளை கையில் எடுத்து அவமதிக்க முயன்றுள்ளான். உடனே அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அந்த வாலிபரை வெளியில் இழுத்து வந்து அடித்து உதைத்தனர். மேலும் வழிபாட்டுத்தலத்தின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூறி ஆத்திரத்தில் கோயிலிலிருந்தவர்கள் அவரை அடித்து கொன்றனர்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் கபுர்தாளா மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் ஏற்றப்பட்டிருந்த சீக்கியர்களின் கொடியை அவமதித்ததாக கூறி அப்பகுதிமக்கள் ஒருவனை சரமாரியாக தாக்கினர். போலீசார் அவனை அழைத்து செல்ல முற்பட்ட போது, தங்கள் முன்னிலையிலே விசாரிக்குமாறு அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து போலீசாருடன் ஏற்பட்ட கைகலப்பிற்கு மத்தியிலே அவர்கள் அந்த நபரை அடித்தே கொலை செய்தனர்.
இது தொடர்பாக போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சீக்கியர்கள் கொடியை அவமதித்த நபரை போலீஸாரிடமிருந்து தனியாக இழுத்துச் சென்று அடித்து கொன்றனர். 24 மணி நேரத்தில் இரண்டு பேர் மத ரீதியிலான மோதலில் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பதற்ற நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதமும் இதே போன்று சீக்கியர்களின் புனித நூலை அவமதிக்க முயன்ற நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பஞ்சாபில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கத்துக்கு மாறாக இந்த தேர்தலில் பஞ்சாபில் மத வன்முறைகளை வெடிக்கச் செய்யும் விதமாக பல்வேறு சம்பவங்கள் நடத்தபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.