
நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை வியாபார ரீதியில் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தண்டனை வழங்கி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வணிக ரீதியில் விற்பனை
இதற்கான அறிவிப்பு மத்திய அரசு புதிதாக தயாரித்து வரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
மின்னணு வர்த்தக நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை வணிக ரீதியில் விற்பனை செய்யவதாக புகார் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வழக்கு தொடர உரிமை
இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நுகர்வோரின் தகவல்கள் வெளியிடப்படுவது குறித்த பிரச்சினை, நாடாளுமன்றதில் மசோதா நிறைவேறும்போது தீர்க்கப்படும்.
முறையற்ற வகையில் தகவல்கள் வெளியிடப்படுவதை எதிர்த்து மக்கள், நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர உரிமை வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
ராம்விலாஸ் பஸ்வான்
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், ‘‘தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பு குறித்த பிரச்னைகளை இந்தியாவிடம் பகிர்ந்துள்ளன.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மற்ற நாடுகளிடமிருந்து நாங்கள் கற்று கொண்டது அனைத்தும் அரசின் கொள்கையில் எதிரொலிக்கும்’’ என்றுகூறினார்.
அபராதம்
பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மின்னணு வணிகங்கள் மூலம் மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அளிக்கும் போது, அதனை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது. மின்னணு வணிகம் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில், இந்த விவகாரத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்’’ என அவர் கூறினார்