
பாஜகவின் 3 நியமன அமைச்சர்களின் நியமனம் செய்து வைத்தது செல்லாது என்று புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே பிரச்சனை இருந்து வருகிறது. ஆளுநர் கிரண்பேடி அரசு விவகாரங்களில் தலையிடுவதாகவும் அரசை செயல்படாமல் தடுப்பதாகவும் அவர் மீது அரசு தரப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை சட்டப்பேரவை நியமன உறுப்பினர்களாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார். புதுவை ஆளுநர் மாளிகையில் அவர்களுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் தங்களுக்கு அடையாள அட்டை மற்றும் பேரவையில் இருக்கை ஒதுக்க வேண்டுமென சட்டப்பேரவை அலுவலகத்தல் மனு அளித்திருந்தனர்.
வரும் 23 ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் பேரவைத் தலைவர் வைத்தியலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பாஜகவை சேர்ந்த 3 நியமன உறுப்பினர்களின் நியமனம் செய்து வைத்தது செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை நிலை ஆளுநர் செய்து வைத்த பதவிப்பிரமாணம் ஏற்கதக்கதல்ல என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மூன்று எம்.எல்.ஏ.க்களின் நியமனங்களை ஏற்குமாறு புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.