சோத்துக்கு சிங்கி அடிக்கிற மக்கள் வாழுற நாட்டுல, ஐம்பது லட்சம் ரூபாய் கவர்மெண்ட் காரு பேரீச்சம்பழத்துக்கு கெடக்குது: மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அரசியல்வாதிகள்.

By Vishnu PriyaFirst Published Nov 5, 2019, 6:40 PM IST
Highlights

கடந்த பா.ஜ.க. ஆட்சியில் லோக்சபா சபாநாயகராக இருந்தவர் சுமித்ரா மகாஜன்.  இந்த தேர்தலில் இருந்து தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டார். 
ஆனால் இவர் சபாநாயகராக இருந்தபோது 2016-ல் இவருக்காக ‘ஜாகுவார்’ எனும் மிக காஸ்ட்லியான கார் வாங்கப்பட்டது. அப்போது அதான் விலை 48 லட்சம். ஏற்கனவே சுமித்ரா வைத்திருந்த ‘டொயோட்டா கேம்ரி’க்கு பதிலாக இந்த காரை தேர்ந்தெடுத்தாராம். அரசு பணத்தில் கிட்டத்தட்ட அரைக்கோடி செலவில் காரா? என்று பலர் பொசுங்கினர்.

இந்த பூகோளத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு! என்று பெருமை பீற்றிக் கொள்கிறது இந்தியா. ஆனால் ஒரு சர்வாதிகார நாட்டில் எந்தளவுக்கு மக்களின் உரிமையும், பணமும், உழைப்பும் அடிமைப்படுத்தப்படுகிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இங்கேயும் அத்தனை அழிச்சாட்டியங்களும் நடக்கத்தான் செய்கின்றன. மக்கள் சேவைக்காக பதவியில் வந்தமரும் சாதாரண கவுன்சிலர் முதல் கவர்னர்களை கடந்து ஜனாதிபதி வரை மக்களின் வரிப்பணத்தில் மாட மாளிகைகளில் ராஜபோகமாக வாழ்வாங்கு வாழ்வது உலகமறிந்த ரகசியம். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளமும், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளையும் பார்த்தால் பாமரனுக்கு தலைசுற்றி ரத்த வாந்தி வந்துவிடும். 


தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாகவும், இன்ன பிற வடிவிலும், விரயமாகும் மக்கள் வரிப்பணம் பற்றி ஆயிரம் சவுக்கடிகள் விழுந்தாலும் கூட ஆளும் நிலையிலிருக்கும் யாருமே அதை லட்சியம் செய்வதில்லை. மக்களின் வரிப்பணத்தில் ‘உரிமை, சலுகை, கெளரவம், தகுதிக்கான மரியாதை’ எனும் பெயரில் மிக மிக குதூகலமான வாழ்வை அரசுத்துறையின் உச்ச அதிகாரிகளும், அவர்களை விட அதிகமாக அரசியல்வாதிகளும் வாழ்கின்றனர். இதே இந்தியாவில் இரண்டு வேளை சோறு கூட நிதர்சனமில்லாமல் பல குடும்பங்கள் துன்புறுகின்றன. குட்டிக் குழந்தைகள் கூட பாலுக்கு வழியில்லாமல் சாகும் நிலை இருக்கிறது. ஆனாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ‘வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கும்’ விஷயத்தில் மட்டும் குறையே வைக்காமல் கும்மியடிக்கிறது. அதில் ஒரு லேட்டஸ்ட் உதாரணம் ஒன்றுதான் சமீபத்தில் எதிர்க்கட்சிகளால் வைரலாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் கிளப்பக்கூடிய விவகாரம் அது. விஷயம் இதுதான்....


கடந்த பா.ஜ.க. ஆட்சியில் லோக்சபா சபாநாயகராக இருந்தவர் சுமித்ரா மகாஜன்.  இந்த தேர்தலில் இருந்து தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டார். 
ஆனால் இவர் சபாநாயகராக இருந்தபோது 2016-ல் இவருக்காக ‘ஜாகுவார்’ எனும் மிக காஸ்ட்லியான கார் வாங்கப்பட்டது. அப்போது அதான் விலை 48 லட்சம். ஏற்கனவே சுமித்ரா வைத்திருந்த ‘டொயோட்டா கேம்ரி’க்கு பதிலாக இந்த காரை தேர்ந்தெடுத்தாராம். அரசு பணத்தில் கிட்டத்தட்ட அரைக்கோடி செலவில் காரா? என்று பலர் பொசுங்கினர். அட இது கூட கொடுமையில்லை! இந்த ஜாகுவார் காரில் பயணம் செய்த அவர் மறு நாளில் இருந்து அந்த புதிய காரை ‘வேண்டாம்’ என புறக்கணித்துவிட்டார். அரசு அதிகாரிகள் ஆடிப்போய்விட்டனர். ஏன் மேடம்? என்று தயக்கமாய் கேட்டபோது “இந்த காரில் பின்னால் உட்கார முடியவில்லை. கால் வைக்கும் இடம் மிக குறைவாக இருக்குது. உட்கார கஷ்டமாக இருக்குது. நான் ஜாகுவாரில் இரண்டு மாடல்களைப் பார்த்தேன்.  நான் தேர்ந்தெடுத்தது ஒரு மாடல். ஆனால் என் அலுவலகமோ இந்த மாடலை வாங்கிவிட்டது.” என்று  சுமார் அரைக்கோடி மதிப்புடைய காரை  முகச்சுளிப்புடன் புறக்கணித்துவிட்டாராம். சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டருக்கும்  குறைவாகவே இதுவரையில் ஓடிய அந்த கார், அன்றிலிருந்து ஷெட்டிலேயே தூங்குகிறதாம். விரைவில் ஏலத்துக்கு கூட வரலாமாம்! இப்படியே விட்டால் அது பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் கடைக்குதான் போகும் நிலை வந்துவிடலாம்! என்று அதிகாரிகளே கிண்டலடிக்கின்றனர். 


 கடந்த பதினெட்டு ஆண்டுகளில் சபாநாயகர்களுக்காக ஐந்து கார்கள் வாங்கப்பட்டுள்ளனவாம். நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் அம்பாசிட, பதினான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் ஹோண்டா அக்கார்டு, இருபத்தியோரு லட்சம் ரூபாய் மதிப்பில் டொயோட்டா கேம்ரி அப்புறம் நாற்பத்து எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில் ஜாகுவார். 
ஜாகுவார் கராஜில் தூங்கிக் கொண்டிருக்க, இப்போது முப்பத்து ஆறு லடம் ரூபாய் மதிப்பில் புதிய டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் வாங்கப்பட்டுள்ளதாம்! 
ஹும் அரைக்கோடி ரூபாயில் இந்த தேசத்தில் எத்தனை ஆயிரம் குழந்தைகளின் ஒரு வேளை சாப்பாட்டை தந்திருக்க முடியும்!
அரசியல்வாதிகளுக்கு புண்ணியமாவது, புஸ்வானமாவது! என்கிறீர்களா?

click me!