
விவசாயத்திற்கு வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 39 வைத்து நாளை எட்டியுள்ளது.
மொட்டை அடிக்கும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம், பாடையில் படுத்துக்கொள்ளும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம், முழு நிர்வாண போராட்டம், எலிக்கறி தின்னும் போராட்டம் என எத்தனையோ போராட்டங்களை நடத்தி விட்டாலும், பிரதமர் மோடி இதுவரை விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை.
இதனால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கடை அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடியும், விவசாயிகளை சந்தித்து பேசவும், அது குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதாகவும் டெல்லி செல்கிறார்.
தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டம், தேசிய அளவில் மட்டுமன்றி, ஆங்கில ஊடகங்கள் வழியாக, உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது.
போராட்டமும், கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை அறிவித்து, மக்கள் முகம் சுளிக்கும் வகையில் அய்யாக்கண்ணு, ஒரு போராட்டம் நடத்த வேண்டுமா?. என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது.
சிறுநீர் என்பது மனிதக் கழிவு, அதை மனிதனே உட்கொள்வது, அதை பார்ப்பவருக்கும், நினைப்பவருக்கும், விவசாயிகள் என்றாலே சிறுநீர் குடிக்கும் சம்பவம்தானே நினைவுக்கு வரும்?. அதனால், அய்யாக்கண்ணு சிறுநீர் போராட்டத்தை தவிர்த்திருக்கலாம் என்றே பலரும் கூறுகின்றனர்.
போராடும் விவசாயிகளை, டெல்லியில் இருக்கும் பிரதமரே சந்தித்து பேசவில்லை. அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, விவசாயிகள் என்ன போராட்டம் நடத்துகின்றனரா? அல்லது குரங்கு வித்தை காட்டுகிறார்களா? என்று கிண்டல் அடித்து வருகிறார்.
இந்த நேரத்தில், சிறுநீர் குடித்து போராட்டம் நடத்தினால், அது நக்கல் செய்பவர்களுக்கு கூடுதல் பலம் சேர்த்துவிடும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், தமது சிறுநீரை தாமே குடிப்பதாக சொன்ன ஒரு செய்தி, அவரை பார்க்கும் போதெல்லாம், சிறுநீர் ஞாபகம்தான் வருகிறது என்று பலர் கேலி செய்த நிகழ்வுகள் எல்லாம், வயதில் மூத்த அய்யாக்கண்ணு போன்றவர்களுக்கு தெரியாதா?
எனவே? எத்தனையோ வழிகளில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை தவிர்த்திருக்கலாம் என்பதே பொதுவானவர்களின் கருத்தாக உள்ளது.