கர்நாடக-கேரளா பனிப்போர் வலுக்கிறது: கேரளாவைச் சேர்ந்த 1,800 பேருக்கு மங்களூரு போலீஸார் சம்மன்..!

By Asianet TamilFirst Published Jan 21, 2020, 5:56 PM IST
Highlights

மங்களூருவில் கடந்த மாதம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது தொடர்பாக, கேரளாவை சேர்ந்த 1,800 பேருக்கு மங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் அதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவியது. நாட்டின் பல பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக வெடித்தது. குறிப்பாக கடந்த மாதம் 19ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.


போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க கர்நாடகா போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் 2 பேர் பலியாகினர். இந்த கலவரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கேரளாவின் காசராகோடு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1,800 பேருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி மங்களூரு நகர போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த 1,800 பேரில் பெரும்பகுதியினர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கலவரம் நடந்த பகுதியில் அவர்களின் செல்போன் லோக்கேஷன் காட்டியது அடிப்படையில் அவர்களுக்கு மங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


இது தொடர்பாக காசராகோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் அலி ஹர்ஷத் வோர்கடி கூறுகையில், இதுவரை காசராகோடு மாவட்டத்தில் 1,800 பேர் சம்மன் பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தை இங்குள்ள அதிகாரிகளிடம் எழுப்புவேன். அவர்கள் அப்பாவி மக்கள் மீது பொய் கூறுகிறார்கள். மங்களூரு கலவரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறி கேரள மக்களை அவமானப்படுத்துகின்றனர். இது ஆபத்தானது மற்றும் அண்டை இடங்களுக்கு கூட மக்கள் சுதந்திரமாக செல்லும் உரிமையை கேள்வி கேட்கிறது என தெரிவித்தார்.

click me!