உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவருமே போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் மேலிட வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 109 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கு நாடு தயாராகி வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மொத்தம் 80 தொகுதிகளை கொண்ட நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கான்கின்றன. அம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிடுகிறது.
மத்தியில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் மக்களவைத் தேர்தலில் மிகவும் கவனிக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது. அம்மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் காட்சியின் கோட்டையான ரேபரேலி, அமேதி மக்களவைத் தொகுதிகள் தவிர ஏனைய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளுக்குமான வேட்புமனுத்தாக்கல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பாக ரேபரேலியில் பிரியங்கா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரும் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த பின்னணியில், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவருமே போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் மேலிட வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதுதான் இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
ரேபரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக எம்.பியாக பதவி வகித்துள்ளார் சோனியா காந்தி. அதற்கு முன்பு 12 முறை காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ரேபரேலி தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான சோனியா காந்தி, ராஜ்யசபாவுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனக்கூறி, ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதமும் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது. மேலும், ரேபரேலி தொகுதியில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியரின் இதயம்: சென்னையில் நடந்த அறுவை சிகிச்சை!
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் குறிப்பாக, காந்தி குடும்பத்தின் பாரம்பரியமிக்க ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவருமே போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் மேலிட வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதில், பிரியங்கா காந்தி இன்னும் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. நீண்ட காலமாக அவரது வருகை கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர் பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் நிச்சயம் களம் காண்பார் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கும் நிலையில், தனது தாயாரின் ரேபரேலி தொகுதியில் அவர் போட்டியிட்டால் கூடுதல் பலம் என்கிறார்கள்.
அதேசமயம், ராகுல் காந்தி கடந்த முறை வெற்றி பெற்ற கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார். தனது தந்தை ராஜீவ் காந்தியின் அமேதி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, 2014ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வெற்றி பெற்றார். ஆனால், 2019 தேர்தலில் பாஜகவின் ஸ்மிர்தி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார். இதனை முன்னரே கணித்துதான் ராகுல் காந்தி இரண்டு இடங்களில் போட்டியிட்டதாக அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ராகுல் மற்றும் காங்கிரஸ் மேலிடத்தை பொறுத்தவரை உத்தரப்பிரதேச மாநிலம் உணர்வுப்பூர்வமானதும், நெருக்கமானதும் என்பதால், இந்த முறையும் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. கேரளாவில் மக்களவைத் தேர்தல் நாளை முடிந்ததும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அண்மையில், ஆசியநெட் செய்திக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூட ராகுல் காந்தி மற்றொரு தொகுதியில் போட்டியிடுவார் என கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.