இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் தற்போதுள்ள வேலையில்லா தொழிலாளர்களில் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலும் அதன் மூலம் தெரியவந்துள்ளது.
காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு, வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இந்திய ரிசர்வ் வங்கி, மற்றும் முக்கிய அரசாங்க திட்டங்கள் உள்ளிட்ட சில அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் படி இந்தியாவில் கடந்த சில வருடங்களாக வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
undefined
2017-18 முதல் 2022-23 வரை இந்தியாவில் வேலைவாய்ப்பு 46.8 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் தொழிலாளர் பங்கேற்பும் 49.8 சதவீதத்தில் இருந்து 57.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் வேலையின்மை விகிதமும் 6 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.
2017-18ல் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 2022-23ல் 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 7.7 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையும் கணிசமாக குறைந்திருக்கிறது.
இதையும் படியுங்கள்... தெலுங்கானாவில் காற்றில் சரிந்த பாலம்! இதைத்தான் 8 வருஷமா கட்டிகிட்டு இருந்தாங்களா!
2017-18ல் 5.6 சதவீதமாக இருந்த பெண்கள் வேலையின்மை தற்போது 2.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதேபோல் இளைஞர்களின் வேலையின்மையும் 17.8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக படித்த நபர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 2017-18ல் 49.7 சதவீதமாக இருந்தது, அது 2022-23ல் 55.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் முதுகலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 67.8 சதவீதத்தில் இருந்து 70.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நிதி, காப்பீடு, கட்டுமானம், போக்குவரத்து, ஐடி மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் வேலை காலியிடங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதால் பொருளாதார மீட்சியில் சாதகமான சூழல் உருவாகி இருக்கிறது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா போன்ற அரசாங்க திட்டங்கள் மூலம் கணிசமான நிதி வழங்கப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பை அதிகரித்ததில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களும் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... விவிபேட் வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு: தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம்!