உலகப்போரை விட மோசமான கொரோனா.. மருந்து இன்னும் கண்டுபிடிக்கல.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை

By karthikeyan VFirst Published Mar 19, 2020, 9:08 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்துவரும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 22 அன்று ஊரடங்கு உட்பட பல்வேறு வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் அதிவேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. சீனா, இத்தாலி, ஈரானில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்குகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் தினந்தோறும் 25-30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா வைரஸ் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறிவது முதற்கட்டம். அவர்களிடமிருந்து அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரவுவது இரண்டாவது கட்டம். அவர்களிடமிருந்து பொது சமூகத்திற்கு பரவுவது மூன்றாவது கட்டம். அப்படி பொதுச்சமூகத்திற்கு பரவிவிட்டால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடும். இதில் நாம் இப்போது இரண்டாவது கட்டத்தில் இருப்பதால், தற்காத்துக்கொண்டால், கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்.

இந்நிலையில், கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக வரும் 22ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மக்களுக்காக மக்களே சோதனை ஊரடங்கை பின்பற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம். 

அன்றைய தினம் பத்திரிகையாளரிகள், உணவு விநியோகிப்பவர்கள் என அத்திவாசிய பணிகளில் ஈடுபடுவோரை தவிர வேறு யாரும் வெளியே வர வேண்டாம். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாலை 5 மணிக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியேவந்து நன்றி தெரிவியுங்கள். 

கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகப்போரை விட மோசமானது கொரோனா. எனவே மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். குறிப்பாக முதியவர்கள் வெளியே வருவதை தடுக்க வேண்டும். கொரோனா எதிரொலியால் வேலைக்கு வராதவர்களுக்கு ஊதியத்தை குறைக்க வேண்டாம். வீட்டில் இருந்தே வேலை பாருங்கள். கொரோனா எதிரொலியால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் வேலையை பலர் இழக்க நேரிடும். அதனால் யாரும் வேலையை இழக்காத அளவிற்கு, பாதிப்பிலிருந்து மீள்வதற்கு குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 
 

click me!