
ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுவதால், அரசுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
ஒப்பந்தம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘டிசால்ட்’ என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் டிசால்ட் நிறுவனம், இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்நிறுவனத்துடன் இணைந்து விமானங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
ரத்து
ஆனால், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஒப்பந்தத்தை 2015ம் ஆண்டு ஜூன் 30ந்தேதிரத்து செய்தது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரான்ஸ் நிறுவனம் ரபேல் விமானங்களை தயாரிக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்தது.
காங்கிரஸ் ஆட்சியின் போது ஒருவிமானத்தின் விலை ரூ.526 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் போது ரூ.1,570 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை டுவிட்டர் மூலம் எழுப்பி உள்ளார்.
ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது-
ஒட்டுண்ணி முதலாளித்துவம்
பிரதமர் மோடி பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார். அதிகமான விலைக்கு ரபேல் போர் விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. டிசால்ட் நிறுவனத்துடன் இணைந்து விமானங்களை தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இது ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் செயல்பாடாகும்.
சுயச்சார்பா?
‘மேக் இன் இந்தியா’ வின் தத்துவமே ‘சுயச்சார்பு’(ரிலையன்ஸ்) என்பதாகும். ஆனால், இப்போது மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை சார்ந்து அதன் அர்த்தத்தை மாற்றிவிட்டது. விமான தயாரிப்பு துறையில் எந்த முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ்நிறுவனத்திடம் எவ்வாறு ரபேல் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க முடியுமா?.
மோடிஜி- உங்களின் கோட், சூட் மட்டும் கைவிட்டால் போதாது, கொள்ளையையும்(loot) கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மோடியிடம் கேட்கமாட்டீர்களா?
டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த ராகுல் காந்தி பேசுகையில், “ என்னிடமே அதிகமான கேள்விகளை கேட்கிறீர்கள். நானும் முறையாக பதில் அளிக்கிறேன். ஆனால், ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள்?. ஒரு தனிமனித தொழிலதிபருக்காக ஒட்டுமொத்த ரபேல் ஒப்பந்தத்தையே மோடி மாற்றி இருக்கிறார். அரசுக்கு இதன் மூலம் ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. ’’ எனத் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் மிரட்டல்
காங்கிரஸ் கட்சியும், அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகளை திருப்பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனரிலையன்ஸ் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பாதுகாப்பு துறையில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தேவையில்லை என்று 2016ம் ஆண்டு அரசு கூறியுள்ளது. மத்திய அமைச்சரவையிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை’’ எனத் தெரிவித்தது.
பிரான்ஸ் மறுப்பு
மேலும், காங்கிரஸ் குற்றச்சாட்டை பிரான்ஸ் பாதுகாப்பு துறை வட்டாரங்களும் மறுத்துள்ளன. ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் தரத்தின் அடிப்படையிலும், வௌிப்படையாகவும், சந்தைப் போட்டியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளது.
பா.ஜனதா மறுப்பு
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் கூறுகையில், “ அகஸ்டாவெஸ்ட்லாண்ட் வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் யார் பலன் அடைந்தார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறதா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.