
நாடாளுமன்றத்தில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசாமல், மக்களை திசை திருப்பியுள்ளார் பிரதமர் மோடி எனவும் நாட்டை முன்னெடுத்து செல்ல இயலாததால் கடந்த காலத்தை பற்றி பேசுகிறார் எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டின் குறித்து நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, 90 முறைக்கு மேல் மாநில அரசாங்கங்களை அகற்றி சட்டத்தை தவறாக பயன்படுத்திய காங்கிரஸ், ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது எனவும் தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்றும் தெரிவித்தார்.
சாமானிய மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சிகள் காயப்படுத்துகின்றன எனவும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு இப்போது அனுபவிக்கிறது எனவும் நாட்டை பிளவுப்படுத்தியது காங்கிரஸ் கட்சியே எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.
தினந்தோறும் 30,000 இளைஞர்கள் வேலை தேடும் நிலையில் 450 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது எனவும் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் வேலையில்லா இளைஞர்களை உருவாக்கி வருகிறோம் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
விவசாயிகள் நம்பிக்கை இழக்கிறார்கள் எனவும் சீனா, பாகிஸ்தான் நாடுகளால் எல்லையில் இந்தியா கடும் பதற்றத்தை, உயிரிழப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத்தில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசாமல், மக்களை திசை திருப்பியுள்ளார் பிரதமர் மோடி எனவும் நாட்டை முன்னெடுத்து செல்ல இயலாததால் கடந்த காலத்தை பற்றி பேசுகிறார் எனவும் சாடியுள்ளார்.