அதிகரிக்கும் கொரோனா பரவல்...! புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு ..? பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை.

By Ajmal KhanFirst Published Apr 27, 2022, 10:56 AM IST
Highlights

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் நாட்களில் எடுக்க வேண்டியு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களோடு ஆலோசனை மேற்கொள்கிறார்.
 

ஏறி இறங்கும் கொரோனா

கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 2 ஆயிரத்து 483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில்  1399 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இயல்பு வாழக்கையை மக்கள் தொடங்கிய நிலையில் மீண்டும் கொரோனா தலை தூக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை நாள் தோறும் 20 முதல் 25 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 72 பேருக்க நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர்களோடு பிரதமர் ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பு வரும் நாட்களில் சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே மருத்துவ நிபுரணர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களோடு பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவது, மருத்துவ உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு  தொடர்பாக அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மாநில அரசு முடிவெடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது. 
ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் 6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பாகவும் அனைத்து மாநில முதல்வர்களோடு பிரதமர் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய காட்டுப்பாடுகள் என்ன?

தமிழகத்தை பொறுத்துவரை அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குப் படி மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும் மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி முகாமை தமிழக அரசு வரும் வாரத்தில் நடத்த உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!