Sakshi Singh Dhoni: தோனி வீட்டிலும் மின் வெட்டு...? டுவிட்டரில் கொந்தளித்த சாக்‌ஷி

By Ajmal KhanFirst Published Apr 26, 2022, 12:27 PM IST
Highlights

தொடர் மின் வெட்டு காரணமாக பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி  சாக்‌ஷி, மின் பற்றாக்குறைக்கு காரணம் என்ன? என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடை வெயிலால் மக்கள் பாதிப்பு

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்  காரணமாக நாடு முழுவதும் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் தாங்க முடியாத காரணத்தால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. எனவே இந்த நேரத்தில் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் ஏசி, மின் விசிறி போன்றவற்றை பயன்படுத்துவது காரணமாக மின் பற்றாக்குறை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்ய ஒவ்வொரு மாநில அரசும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே போல ஜார்கண்ட் மாநிலத்தில்  40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை காணப்படுகிறது.  கிர்தி, கிழக்கு சிங்பூம், மேற்கு சிங்பூம், ராஞ்சி, பொகாரோ, கோடெர்மா, பலமு, கர்வா, சத்ரா ஆகிய மாவட்டங்களில் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மின் நெருக்கடிக்கு காரணம் என்ன?

ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகள் குறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.அப்போது கூடுதல் ரயில் பெட்டிகளில் நிலக்கரி ஜார்கண்ட் மாநிலத்திற்கு தேவைப்படுவது குறித்து ஆய்வு செய்தனர்.

சாக்‌ஷி டுவிட்டர் பதிவு

இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் மின் வெட்டு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான  தோனியின் மனைவி சாக்‌ஷி டுவிட்டரில் கொதித்தெளுந்துள்ளார். அதில் அரசுக்கு வரி செலுத்துபவர் என்ற முறையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக மின் நெருக்கடி ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புவதாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.  ஆற்றலைச் சேமிப்பதை உறுதி செய்வதன் மூலம் தங்களின் பங்கைச் சரியாக செய்து வருவதாகவும் சாக்‌ஷி அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சாக்‌ஷியின் டுவிட்டர் பதிவு சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

click me!