
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதி முடிவடையுள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் ஜூலை 17-ந்ேததிநடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் வாக்கு எண்ணிக்கை 20ந்தேதி நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நேற்று அறிவித்தார்.
பதவிக்காலம்
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதிமுடிகிறது. இதற்கு முன்பாக தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
தேவைப்பட்டால் தேர்தல்
குடியரசு தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமித்த கருத்துடன் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பட்சத்தில் தேர்தல் நடைபெறாது. ஆனால், ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒருதரப்பிலும் வேட்பாளர்களை தனித்தனியாக நிறுத்தும் பட்சத்தில் தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணப்படும்.
இந்நிலையில், டெல்லியில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
புதிய குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடர்பாக ஜூன் 14-ம் தேதி முறைப்படி அறிவிக்கை வெளியிடப்படும். தேவைப்பட்டால் தேர்தலும், வாக்கு எண்ணிக்கையும் நடக்கும்.
வேட்புமனு தாக்கல்
ஜூன்14-ந்தேதி அன்றே அன்றே வேட்பு மனு தாக்கலும் தொடங்குகிறது. வேட்புமனுக்களை ஜுன் 28-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 30-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஜூலை 1-ம் தேதி கடைசி நாளாகும்.
17-ந்தேதி தேர்தல்
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டி இருந்தால், ஜூலை 17-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். அதாவது ஜூலை 17-ந்தேதி காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும். ஜூலை 20-ம் தேதி காலை 11 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
முன்மொழிதல்
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை, வாக்களிக்க தகுதி உள்ள நபர்கள் அதாவது, எம்.எல்.ஏ. எம்.பி.க்கள் 50 பேர் முன்மொழிய வேண்டும், 50 பேர் வழிமொழிய வேண்டும். வாக்குகளிப்பவர்கள் முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு முதலாவது முன்னுரிமை, 2-வது யாருக்கு என்று குறிப்பிட வேண்டும்.
தேர்தல் அலுவலர்கள்
இந்த தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள். அந்தந்த மாநில சட்டப் பேரவைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.