மறைந்த என்.டி.ராமாராவின் ரூ.100 நினைவு நாணயத்தை வெளியிட்ட குடியரசுத்தலைவர்!

By Manikanda Prabu  |  First Published Aug 28, 2023, 4:32 PM IST

மறைந்த என்.டி.ராமாராவின் நினைவு நாணயத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார்.
 


ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான நந்தமுரி தாரக ராமராவ் உருவம் கொண்ட ரூ.100 வெள்ளி நாணயத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வெளியிட்டார்.

மறைந்த என்.டி.ராமாராவின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பதித்த நாணயத்தை குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் என்.டி.ஆரின் மகன்கள், மகள்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

விழாவில் பேசிய குடியரசுத்தலைவர், மறைந்த என்.டி.ராமாராவ், தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இந்திய திரைப்படத் துறையையும், கலாச்சாரத்தையும் வளப்படுத்தியுள்ளார்  என்று தெரிவித்தார்.  ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பின் மூலம் அவர்  உயிர் கொடுத்தார். அவர் நடித்த ராமர் மற்றும் கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் இருந்ததால் மக்கள் என்.டி.ஆரை வணங்கத் தொடங்கினர். என்.டி.ஆரும் தனது நடிப்பின் மூலம் சாமானிய மக்களின் வலியை வெளிப்படுத்தியதாக  குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

அனைத்து மனிதர்களும் சமம் என்ற தனது 'மனுசுலந்தா ஒக்கதே' படத்தின் மூலம் சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்த செய்தியை என்.டி.ஆர் பரப்பியதாகவும், ஒரு பொது சேவகராகவும், தலைவராகவும் என்.டி.ஆரின் புகழ், சமமாக பரந்து விரிந்துள்ளது என்றும் குடியரசுத்தலைவர் கூறினார்.

 

President Droupadi Murmu released the commemorative coin on Late Shri NT Rama Rao on his centenary year at RBCC. The President said that Late Shri NT Rama Rao has enriched Indian cinema and culture through Telugu films. NTR’s popularity was equally wide as a public servant and… pic.twitter.com/GeF2C3n0dE

— President of India (@rashtrapatibhvn)

 

தனது அசாதாரண ஆளுமை மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்திய அரசியலில் ஒரு தனித்துவமான அத்தியாயத்தை உருவாக்கிய என்.டி.ஆர்., பல மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அவை இன்றும் நினைவில் உள்ளன.

என்.டி.ஆரை  போற்றும் வகையில்  நினைவு நாணயத்தை  அறிமுகப்படுத்தியதற்காக இந்திய அரசின் நிதி அமைச்சகத்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பாராட்டினார். அவரது தனித்துவமான ஆளுமை, எப்போதும் மக்களின் இதயங்களில், குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களின் இதயங்களில் பதிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்.டி.ராமாராவின் நினைவு நாணயத்தின் மதிப்பு ரூ.100 ஆகும். 44 மிமீ விட்டம் கொண்ட அந்த நாணயம், 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவற்றால் ஆனது. நாணயத்தில் மூன்று சிங்கங்கள் மற்றும் ஒருபுறம் அசோக சக்கரம் மற்றும் மறுபுறம் என்டிஆர் உருவம், 'நந்தமுரி தாரக ராமராவ் சதா ஜெயந்தி' என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. என்டிஆர் நூற்றாண்டு விழா, நாணயத்தில் 1923-2023 என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், என்டிஆரின் மகளும், முன்னாள் மத்திய அமைச்சருமான டகுபதி புரந்தேஸ்வரி தனது தந்தையின் 100ஆவது பிறந்தநாளில் அவரது நினைவு நாணயத்தை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

51,000 பேருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர்களை வழங்குகிறார் பிரதமர் மோடி.. ரோஸ்கர் மேளா மூலம் நியமனம்

என்.டி.ராமராவ், இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருந்தார். மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்த அவர், இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஒரு நந்தி விருது மற்றும் ஒரு பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். 1968 இல் இந்தியாவின் மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

click me!