புதிய நாடாளுமன்றத்தை நேற்று பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து இருந்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை 20 எதிர்கட்சிகள் புறக்கணித்து இருந்தன. ஜனாதிபதியை இந்த விழாவிற்கு அழைக்கவில்லை, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும், மதச்சார்பு மீறப்பட்டுள்ளது என்று பல்வேறு காரணங்களைக் கூறி விழாவை புறக்கணித்தனர். இந்த நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரை நேற்று நடந்த விழாவில் வாசிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையை மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார். முர்மு தனது செய்தியில், ''சட்டப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்தான் நாட்டை வழி நடத்துகிறார். புதிய நாடாளுமன்றத்தை திறப்பதற்கு அவர்தான் சரியான் தேர்வு. நாடாளுமன்றத்தின் நம்பிக்கையின் அடையாளத்தில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது. அவர் நாடாளுமன்றத்தை திறந்து வைப்பதிலும் எனக்கு முழு திருப்தி. புதிய நாடாளுமன்றம் நாட்டின் கவுரவம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும். இந்திய மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி, சந்தோசம்.
புதிய நாடாளுமன்ற திறப்பு ஜனநாயக பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. நமது ஜனநாயகத்தின் கொள்கை தொடர்ந்து மக்களை ஈடுபடுத்தியும், ஏழைகளை வலிமைப்படுத்தியும் வருகிறது. ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள் இன்று உச்சத்தை எட்டியுள்ளனர்.
கடந்த 70ஆண்டுகளாக நமது நாடாளுமன்றம் பல்வேறு கொள்கை மாற்றங்களுக்கான மையமாகவும், மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு மாற்றங்களை, முடிவுகளை கொண்டு வந்துள்ளது. 75வது சுதந்திர ஆண்டில் புதிய நாடாளுமன்றம் திறந்து வைத்து இருப்பது ஜனநாயகத்தின் முக்கிய கொள்கைகளை தூக்கிப் பிடிப்பதற்கான அடையாளமாக இருக்கிறது. இந்தக் கட்டடம் கட்டுவதற்கு இரவும், பகலும் உழைத்தவர்களை நான் பாராட்டுகிறேன். இந்திய ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை இந்த புதிய நாடாளுமன்றம் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வேண்டும் என்றே புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.