பொன். மாணிக்கவேல் விவகாரம்... மேலும் மேலும் மரண அடி வாங்கும் தமிழக அரசு!

By vinoth kumarFirst Published Dec 13, 2018, 12:29 PM IST
Highlights

சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வு பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.

சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வு பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.

தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பல கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல் போனது. இந்த சிலைகள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்த நிலையில் திடீரென ரயில்வே ஐஜியாக மாற்றப்பட்டார். ஆனால், சிலை கடத்தல் குறித்து விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், ஐஜி பொன்மாணிக்கவேல் கூடுதலாக சிலை கடத்தல் பிரிவு வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இதையடுத்து பொன்.மாணிக்கவேல் சிலைகள் காணாமல் போன வழக்குகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். அதிரடியாக பல்வேறு சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்டார். இந்நிலையில் சிலை கடத்தலில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதால் சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். 

இதையடுத்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்தார். அவர் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசே அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற அதிகாரியை, பதவியில் தொடருமாறு உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச அளவில் தொடர்பிருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றினோம் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். 

click me!