காவல்துறை தகுதித் தேர்வு..கொரோனா பாதித்தவர்களுக்கு மாற்று தேதி அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jan 21, 2022, 9:00 PM IST
Highlights

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் தகுதி தேர்வில் பங்கேற்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் தகுதி தேர்வில் பங்கேற்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு காவல்துறை துணை தலைவர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 431 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதையொட்டி கடந்த 18ஆம் தேதி முதல் புதுச்சேரி காவல்துறை விருந்தினர் மாளிகையில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அப்போது தகுதியான விண்ணப்பதாரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடுத்த  மாதம் 21ஆம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.தகுதியான விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்பட்ட மையங்களை தவிர மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களிலும் பரிசோதனை செய்து தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களின் கொரோனா சான்றிதழை ஸ்கேன் செய்து உடனடியாக புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆள்சேர்ப்பு பிரிவுக்கு cmtpap.pon@nic.in என்ற மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யவேண்டும். 

அதன்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான மாற்றுத்தேதி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மின்னணு ஊடகம், மின்னஞ்சல் மூலம் தனித்தனியாக அவர்களுக்கு தெரிவிக்கப்படும். அவர்களின் அனுமதி அட்டையில் உள்ளபடி உடல் தகுதித்தேர்வு தேதிக்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என அதில் கூறப்பட்டுள்ளது.

click me!