மின்துறை ஊழியர்கள் பிப்.1 முதல் வேலைநிறுத்தம்... தனியார் மயமாக்கத்தை கைவிடக் கோரிக்கை!!

Published : Jan 21, 2022, 07:45 PM IST
மின்துறை ஊழியர்கள் பிப்.1 முதல் வேலைநிறுத்தம்... தனியார் மயமாக்கத்தை கைவிடக் கோரிக்கை!!

சுருக்கம்

தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரி புதுச்சேரி மாநில மின்துறை ஊழியர்கள் பிப்.1 ஆம்  தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரி புதுச்சேரி மாநில மின்துறை ஊழியர்கள் பிப்.1 ஆம்  தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்களின் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி புதுவையில் உள்ள மின்துறை தனியார் மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு புதுவை மாநில மின்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர் மற்றும் தொழிலாளர் தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழுவை அமைத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 15 தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தனியார் மயத்தை எதிர்த்து அவர்கள் தனித்தனியாக அரசுக்கு கடிதம் அளித்தனர்.

இந்த நிலையில் மின்துறை தனியார் மயமாக்கத்தால் ஊழியர்களின் பணிக்கு பாதிப்பு இருக்காது என்பதை விளக்கும் கூட்டம் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மின்துறை சார்பு செயலாளர் முருகேசன், தலைமை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், சிறப்பு அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு மின்துறை தனியார் மயமாக்கப்படும் போது எந்த நிலையில் இருக்கும், தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறித்து விளக்கி கூறினர். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்டு சங்க பிரதிநிதிகள், புதுச்சேரி மின்துறை லாபகரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஏன் தனியார் மயமாக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தனியார் மய எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மின்துறை பொறியாளர், தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கூறுகையில், புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து நாங்கள் அமைதி போராட்டம் நடத்தினோம். எங்களின் முக்கிய கோரிக்கையான மின்துறை தனியார் மயமாக்கப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின்துறை தொடர்ந்து அரசு துறையாகவே செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் புதுவை அரசு அதனை ஏற்காமல் தொடர்ந்து தனியார் மயமாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று  நடந்த கூட்டத்தில் மின்துறை ஊழியர்கள் அரசு ஊழியர்களாக தொடர எந்த வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. நாங்கள் அரசு ஊழியர்களாக பணிக்கு வந்தோம். அரசு ஊழியர்களாகவே ஓய்வுபெற விரும்புகிறோம். எனவே ஏற்கனவே போராட்ட குழு எடுத்த முடிவின்படி பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!
ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!