ரோந்து பணிக்கு போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம்… தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அனுமதி!!

By Narendran SFirst Published Dec 3, 2021, 5:40 PM IST
Highlights

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என புதுச்சேரி எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன்  உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என புதுச்சேரி எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன்  உத்தரவிட்டுள்ளார். இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல்துறையினரின்  பாதுகாப்பை உறுதி செய்யவே இவ்வாறு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்பட்ட நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பூலாங்குடி காலனி என்ற இடத்தில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்து அவர்களை நிறுத்த முயன்றார். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டிச் சென்றார். கீரனூர், பள்ளப்பட்டி பகுதியில் மூவரும் இருந்த இரு சக்கர வாகனத்தை வழிமறித்து பூமிநாதன் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது 19 வயது மணிகண்டன் என்பவர் தன்னுடன் இருந்த இரண்டு சிறுவர்கள் உதவியோடு அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், பூமிநாதன் பலியானார்.

இதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் படுகொலைசெய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஒரு கோடி நிதி உதவி வழங்கினார். அத்துடன் அவர் வீட்டில் ஒருவருக்கு அரசு பணி அளிக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்தார். அத்துடன் பூமிநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் அளித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, பூமிநாதன் உருவப்படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ரோந்து பணிக்கு செல்லும் போது போலீசார் துப்பாக்கியை எடுத்து செல்ல பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளோம். தற்காப்புக்காக ஆயுதத்தை பயன்படுத்தலாம் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் இனி இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது துப்பாக்கியுடன் செல்ல அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன்  உத்தரவிட்டுள்ளார். இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல்துறையினரின்  பாதுகாப்பை உறுதி செய்யவே இவ்வாறு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!