
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) கல்வித் திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கேரள அரசு, கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அத்திட்டத்தில் இணையும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கு, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடர்ந்து மறுத்து வந்தன. இந்தத் திட்டத்தை ஏற்காததால், மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய சர்வ சிக்ஷா அபியான் (SSA - Sarva Shiksha Abhiyan) திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்தது.
திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், "அந்த நிதியே வேண்டாம்" என்று தமிழ்நாடு அரசு காட்டமான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (CPI(M)) தலைமையிலான அரசும் இதே நிலைமையைப் பின்பற்றியது.
இந்தச் சூழலில், கேரள அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்தது. இதன்படி, கேரள கல்வித்துறை செயலாளர், பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டார்.
மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
குறிப்பாக, கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்த ஒப்பந்தத்திற்கு வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தது. இதன் காரணமாக, கேரள அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையும் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
தற்போது, இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு மாநில அரசு சார்பில் கடிதம் எழுதப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை, கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.