சுயசார்பு இந்தியாவின் அடையாளமாக அமையும் புதிய பாராளுமன்ற கட்டிடம்..! டிச 10 பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

By karthikeyan VFirst Published Dec 5, 2020, 9:36 PM IST
Highlights

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிக்கு வரும் 10ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
 

டெல்லியில் தற்போது உள்ள பாராளுமன்ற கட்டிடம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. இடவசதி கருதி, பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமான பணிகளுக்கு வரும் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் அடையாளமாக புதிய பாராளுமன்றம் திகழும் எனவும் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய பெருமையை பறைசாற்றும் வகையிலும், அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கு 40 சதுர அடியில் தனி அறை, மாபெரும் அரங்கு, நூலகம், உணவருந்தும் இடம், போதுமான பார்க்கிங் வசதி ஆகிய வசதிகளுடன் கூடியதாக கட்டப்படுகிறது.

முக்கோண வடிவத்திலான புதிய பாராளுமன்ற கட்டிடத்துடன், ஒரு பொது மத்திய செயலகம் கட்டவும், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கிமீ நீள ராஜபாதையை மேம்படுத்தவும் புதிய மத்திய அதிகார வளாக மறுமேம்பாட்டுத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எம்பிக்களுக்கான அலுவலகங்கள் காகித ஆவணங்களற்ற அலுவலகங்களாக செயல்படும் வகையில் நவீன டிஜிட்டல் வசதிகள் இருக்கும். புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணியை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம், ரூ.861.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கிறது. புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணியை வரும் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.
 

click me!