Cryptocurrency வர்த்தகத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?.. பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனை..!

By karthikeyan VFirst Published Nov 13, 2021, 9:41 PM IST
Highlights

கிரிப்டோகரன்சி (Cryptocurrency) வர்த்தகத்தில் இந்தியா என்ன மாதிரியான நிலைப்பாடு எடுப்பது மற்றும் எந்தமாதிரியான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆர்பிஐ, நிதியமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
 

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். இந்தியர்கள் பிட்காயின், ஷிபா இனு, டோஜ்காயின், எதிரியம் ஆகிய பல முன்னணி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர்.

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை சீனா தடை செய்தது. ஆனால் அமெரிக்கா பிட்காயின் வாயிலான ஈடிஎஃப்-க்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அனுமதி கொடுக்கத் தொடங்கின.

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்க தயங்கும் இந்திய அரசு, அதேவேளையில் கணிசமான இந்தியர்கள் அதில் முதலீடு செய்திருப்பதால் அதற்கு ஒட்டுமொத்தமாக தடைவிதிக்க தயங்குகிறது. இதுதொடர்பாக நிதித்துறை வல்லுநர்கள், கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, இதுதொடர்பான இறுதி சட்டவரைவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.

கிரிப்டோ மார்க்கெட் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான வழிகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் இந்திய அரசுக்கு உள்ளது. இதற்கிடையே, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஏற்பது சரியான முடிவாக இருக்காது; இந்திய பொருளாதாரத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் செய்துள்ள முதலீட்டு அளவுகள், இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் பார்வை ஆகியவை தற்போது கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

“கிரிப்டோகரன்சி வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் கிரிப்டோகரன்சி வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களிடம் கருத்துகளை கேட்க இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டம் வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவின் பிரபல கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனங்களான CoinSwitch Kuber, CoinDCX, WazirX, and Crypto Assets Council (BACC) ஆகிய நிறுவனங்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், அந்த கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று, இந்த விவகாரம் குறித்து நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் மற்றும் நிதி வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். உலகளவில் கிரிப்டோகரன்சியை ஏற்ற நாடுகள், ஏற்காத நாடுகள் ஆகியவற்றின் பார்வைகள், நடைமுறைகள் விரிவாக பார்க்கப்பட்டன.

கிரிப்டோகரன்சி வர்த்தகம் அதிக லாபம் தரும் என்று மிகைப்படுத்துவதும், வெளிப்படைத்தன்மை இல்லாத விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று பேசப்பட்டது.

கட்டுப்பாடற்ற கிரிப்டோ மார்க்கெட் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான வழிகளாக மாற அனுமதிக்க முடியாது என்றும் விவாதிக்கப்பட்டது.

இது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது, எனவே அரசாங்கம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை உன்னிப்பாகக் கண்காணித்து செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்கும். இந்தத் துறையில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் முற்போக்கானதாகவும், முன்னோக்கிப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஒருமித்த கருத்து இருந்தது.

நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அரசு தொடர்ந்து தீவிர ஆலோசனையிலும் கண்காணிப்பிலும் ஈடுபடும்.  இந்த பிரச்னை தனிப்பட்ட நாடுகளின் எல்லைகளைக் கடந்தது என்பதால், அதற்கு உலகளாவிய கூட்டாண்மை மற்றும் கூட்டு உத்திகள் தேவைப்படும் என்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
 

click me!