பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் மோடி இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்
ஜி20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, ஜி20 அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று, வரலாற்று சிறப்புமிக்க ஜி20 டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாள் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் இரண்டு அமர்வுகள் நடைபெற்ற நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் மூன்றாவது அமர்வு இன்று நடைபெறவுள்ளது. இதில், ஒரே எதிர்காலம் குறித்து பிரதமர் மோடி பேசவுள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமையின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பம் - ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்பதாகும்.
undefined
ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே, 15 நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்படி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் மோடி இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜி20 மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் ஆகியோரை பிரதமர் மோடி நேற்று முன் தினம் சந்தித்தார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் அவர் அன்றைய தினம் சந்தித்தார்.
டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
தொடர்ந்து, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவு குறித்தும் பல்துறை ஒத்துழைப்பு குறித்தும் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, இன்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
முன்னதாக, ஜி20 தலைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பிரகதி மைதானத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதையடுத்து, மூன்றாவது அமர்வு கூட்டம் நடைபெறவுள்ளது.