
செவ்வாய்க்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழையும்போது பிரதமர் மோடி அரசியல் சாசனப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய நாடாளுமன்றத்திற்கு வரவிருக்கும் மாற்றம் அரசியல்வாதிகளின் கவனத்தை மட்டுமல்ல, தேசத்தின் ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் காலை 9:15 மணிக்கு புகைப்பட அமர்வில் பங்கேற்பார்கள், அதைத் தொடர்ந்து மைய மண்டபத்தில் காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டமும் நடைபெறும். அந்தக் கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி, பழைய நாடாளுமன்றத்திலிருந்து புதிய நாடாளுமன்றத்துக்கு மாறுவதைக் குறிக்கும் வகையில் அரசியல் சாசனப் புத்தகத்தை ஏந்தியபடி வருவார்.
செவ்வாய்கிழமை மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில், துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், இந்தியாவின் வளமான நாடாளுமன்ற பாரம்பரியத்தை கவுரவித்துப் பேசுவார்கள்.
இந்த நிகழ்வு தேசிய கீதத்துடன் தொடங்கி முடிவடையும், சென்ட்ரல் ஹால் நிகழ்வுக்கு முன், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் உள் முற்றத்தில் இரு அவைகளின் எம்.பி.க்களின் குழு புகைப்படம் எடுக்கப்படும். புதிய கட்டிடத்தில் மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 1:15 மணிக்குத் தொடங்கும். அதைத் தொடர்ந்து ராஜ்யசபா பிற்பகல் 2:15 மணிக்கு தொடங்கும்.
செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடக்கும் சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு திங்களன்று, பழைய நாடாளுமன்றத்தில் கூடியது. அப்போது மக்களவையில் விவாதத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். 75 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்து பேசினார். அப்போது, நாடாளுமன்றத்தில் தனது முதல் நாள் பற்றியும் பிரதமர் மோடி விவரித்தார்.