2009 ஆம் ஆண்டு முதல் இந்தியப் பிரதமர்களின் அமெரிக்கப் பயணங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள ஏசியாநெட் நியூஸ் தலைமை நிருபர் டாக்டர் கிருஷ்ண கிஷோர், ஒரு நாட்டின் தலைவரின் பயணம் என்றால் என்ன? அது ஏன் இந்தியா-அமெரிக்காவில் ஒரு முக்கியமான தருணம் என்று ஆழமாக பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மோடி இன்று அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா அரசு முறை பயணமாக விருந்தளித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் சமீபத்தில் அழைப்பு விடுத்து இருந்தனர். இதை ஏற்று இன்று அமெரிக்கப் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டு இருக்கிறார். இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே உள்ள நெருங்கிய உறவுகளுக்கு இது சான்றாகும்.
அமெரிக்காவிற்கு பல முறை அரசு முறை பயணங்களை பிரதமர் மோடி மேற்கொண்டு இருக்கிறார். ஆனால் அந்த நாட்டின் அதிபரின் அழைப்பை ஏற்று பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறை. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக பரிமாற்றத்தின் உறவுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
undefined
ஒரு நாட்டுத் தலைவரின் வருகை என்பது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கான அரசு பயணங்கள் அந்த நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் மட்டுமே நிகழ்கின்றன.
மோடிக்கான சிறப்பு வரவேற்புகள் என்னென்ன?
மேரிலேண்டில் ஆண்ட்ரூஸ் விமானப்படை தலத்தில் இறங்கும் பிரதமர் மோடிக்கு 'ஃபிளைட் லைன் செரிமனி' என்ற பெயரில் வரவேற்பு அளிக்கப்படும். மூத்த அமெரிக்க அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிப்பார்கள்.
அமெரிக்காவின் விருந்தினராக பிளேர் ஹவுசில் மோடி தங்குவர். அமெரிக்காவின் அதிகாரபூர்வ விருந்தினர் மாளிகை இதுதான். உலகின் மிகவும் சிறப்பு வாய்ந்த ஹோட்டல் என்று பிளேர் ஹவுஸ் அழைக்கப்படுகிறது.
ஜூன் 22ஆம் தேதி அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி இருவரும் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கின்றனர். இந்த விழாவில் சுமார் 2000 பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையை துவங்குவதற்கு முன்பு இருநாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்படும்.
அமெரிக்க அதிபரும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அரசு முறை விருந்தளிக்கிறார். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உணவு வகைகளில் அமெரிக்க உணவுகளுடன் இந்திய சமையல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உணவு மற்றும் பானங்கள் இடம்பெறும். இந்த விருந்தில் 300 விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அவையில் பிரதமர் மோடி பேசுகிறார். இரண்டாவது முறையாக மோடி பேச இருக்கிறார். இதற்கும் முன்பு 2016ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார்.
அரசு வருகையை மேற்கொள்ளும் நாடுகளின் தலைவர்கள் அவர்களது கலாச்சாரத்தை கவுரவப்படுத்துவதுடன் வலுவான இருதரப்பு உறவுகளும் மேம்படுகிறது. இந்தியாவுக்கு அளிக்கப்படும் அரசு முறைப் பயணம், உலக அரங்கில் நாட்டின் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வுகள் உலக அரங்கில் பிரதமர் மோடியின் ஆளுமைக்கு சான்றாக அமைகிறது.
பிரதமர் மோடி அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு வால் ஸ்டிரீட் ஜர்னலுக்கு அளித்திருந்த பேட்டியில், ''தனது அரசு முறை பயணமானது ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகிய மதிப்புகளின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் வலுவாக நிற்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.