Russia Ukrain Crisis: ரஷ்யா-உக்ரைன் போர்: பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் முக்கிய ஆலோசனை

By Pothy RajFirst Published Feb 24, 2022, 5:12 PM IST
Highlights

உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்துவரும் போரினால் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த அதிகாரிகள் இன்று மாலை சந்தித்து விளக்கம் அளிக்கின்றனர்.

உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்துவரும் போரினால் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த அதிகாரிகள் இன்று மாலை சந்தித்து விளக்கம் அளிக்கின்றனர்.

அப்போது இந்தியாவுக்கு ஏற்படும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை எவ்வாறு சரிசெய்யலாம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் என்ன என்பது குறித்து பிரதமர் மோடியுடன், நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துவார் என ராய்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போர் பதற்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைனின் இருமாநிலங்களை தன்னாட்சியாக ரஷ்ய அதிபர் அறிவித்தபின் தீவிரமானது. ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் நிதித்தடையை விதித்தன. 

 

இந்நிலையில் இந்தியநேரப்படி காலை 6.00 மணிக்கு உக்ரைன் மீது போர் தொடுக்கவும், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவானதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 105 டாலராக எகிறியது. இந்த விலை உயர்வை எண்ணி பல்வேறு நாடுகளும் அஞ்சுகின்றன

ரஷ்யாவுக்கு எதிராக நிதித்தடைகள் பிறப்பிக்கப்பட்டாலே அங்கிருந்து மேற்கத்திய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுஏற்றுமதியில் சிக்கலை ஏற்படுத்தும். 

ஆனால், தற்போது போர் நடந்து வருவதால்,  ஐரோப்பிய நாடுகளின் தேவையை நிறைவுசெய்ய முடியாத நிலை ஏற்படும். உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 11 சதவீதத்தை ரஷ்யா தக்கவைத்துள்ளது, ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் 60 சதவீதம் ரஷ்யாவிலிருந்து செல்கிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யாவிலிருந்து மிகக்குறைவாகவே கச்சா எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயுவை இறக்குமதி செய்கிறது. ரஷ்யா மீதான இந்தத் தடைகள் இந்தியாவை நேரடியாகப் பாதிக்காவிட்டாலும் மறைமுகமாக பாதிக்கும்.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயரும்போது, அதிக விலை கொடுத்து எண்ணெய் நிறுவனங்கள் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தும்

பெட்ரோல், டீசல் விலை உயரும் போது இயல்பாகவே அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயரும். இதன் காரணமாக, உள்நாட்டில் சில்லரை பணவீக்கம் உயரும். தற்போது சில்லரைப்பணவீக்கம் 6 புள்ளிகளுக்கு மேல் இருக்கிறது. இது ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள் இருந்தாலும், பணவீக்கம் அதிகரிக்கும்போது, அதைக் கட்டுக்கப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.

அடுத்துவரும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை உயர்த்தி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும். கடனுக்கான வட்டியை உயர்த்தும்போது, கடன் வழங்குவது கட்டுப்படும், குறையும். ஏற்கெனவே பொருளாதார பாதிப்பு, மந்தநிலை நீடிக்கும் போது, வட்டி அதிகரித்தால், தொழில்துறையை மேலும் பாதிக்கும். இதுபோன்ற சங்கிலித்தொடர்போல பாதிப்புகள் உருவாகலாம். 

இதைத் தவிர்க்க. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும் இவ்வாறு குறைத்தால், பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருக்கும். சில்லரை பணவீக்கமும் உயராது.  இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து நடுத்தர குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.


 

click me!