
தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், மகாராஷ்டிரா அரசில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த, நவாப் மாலிக்கை, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கப்பிரிவு இன்று கைது செய்தது.
மும்பை குண்டுவெடிப்பில் தேடப்பட்டுவரும் நிழல்உலக தாதா, தாவுத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் சட்டவிரோதப்பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு கைது செய்தது. அவரை 7நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கப்பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில், தாவுத் இப்ராஹிமுக்கும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக்குக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து, நவாப் மாலிக்கை விசாரணைக்கு அமலாக்கப்பிரிவினர் அழைத்திருந்தனர். இன்று காலை மும்பையில் உள்ள அவரின் வீட்டில் நவாப் மாலிக் இருந்தபோது, அவரை அமலாக்கப்பிரிவினர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் 6மணிநேரம் விசாரணை நடத்தியபின் அமலாக்கப்பிரிவினர் கைது செய்தனர்
அப்போது அமலாக்கப்பிரிவு அலுவலகத்திலிருந்து வெளியே வந்த நவாப் மாலிக் கூறுகையில் “ வழக்கில் போராடுவோம், வெற்றிபெறுவோம், ஒவ்வொருவரையும் அம்பலப்படுத்துவோம்” எனத் தெரிவித்துச் சென்றார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த நவாப் மாலிக் கட்சியில் உள்ள சிறுபான்மை தலைவர்களில் முக்கியமானவர். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நவாப் மாலிக், பின்னர் அங்கிருந்து விலகி சமாஜ்வாதிக்க ட்சிக்கும், பின்னர் 2001ம் ஆண்டிலிருந்து தேசியவாத காங்கிரஸிலும் தொடர்கிறார்கள்.
மகாராஷ்டிராவில்இதுவரை 5 முறை மும்பையின் அணுசக்தி நகர் தொகுதி எம்எல்ஏவாக நவாப் மாலிக் இருந்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டபோது, போதை மருந்துத் தடுப்புப்பிரிவு தலைமை அதிகாரி சமீர் வான்ஹடேவை கடுமையாக நவாப் மாலிக் விமர்சித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டநிலையில் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசியவாதக் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில் “ ஒருவரின் மரியாதைக் குலைக்க தாவுத் இப்ராஹிம் பெயர் எளிதாக பயன்படுத்தப்படுகிறது. அதிலும் எதிர்க்கட்சியினரையும், எதிரிகளையும் அவமானப்படுத்த தாவுத் பெயர் பயன்படுத்தப்படுகிறது. நான்கூடமுதல்வராகஇருந்தபோது தாவுத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர் என குற்றம்சாட்டப்பட்டேன்” எனத் தெரிவித்தார்