மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடி இன்று வரை வரவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
மணிப்பூர் மாநிலம் தௌபல் மாவட்டம் கோங்ஜோமில் இருந்து ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கியுள்ளார். இதனை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் மக்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, மணிப்பூர் மக்களின் கண்ணீரைத் துடைக்க இந்தியப் பிரதமர் இதுவரை வராதது வெட்கக்கேடானது என சாடினார். நரேந்திர மோடிக்கு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு மணிப்பூர் நாட்டின் ஒரு பகுதி அல்ல எனவும் அவர் விமர்சித்தார்.
பாஜகவின் அரசியலால் மணிப்பூர் தனது விலைமதிப்பற்றதை இழந்துவிட்டது என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, நீங்கள் சொல்வதைக் கேட்கவும், உங்கள் வலியைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம், நல்லிணக்கம், சமத்துவம் கொண்ட இந்தியாவின் புதிய பார்வையை முன்வைக்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டை போலவே பாரத் ஜோடோ நியாய யாத்திரையை கால் நடையாகவே செய்ய விரும்பினேன். ஆனால் வரவிருக்கும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, கால் நடையாக நடக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், நடைபயணமாகவும், வாகனத்திலும் இந்த பயணம் நடைபெறவுள்ளது.” என்றார்.
“உங்கள் இழப்பு மற்றும் துயரத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மணிப்பூர் அறியப்பட்ட நல்லிணக்கத்தையும் அமைதியையும் மீண்டும் கொண்டுவருவோம்.” எனவும் ராகுல் காந்தி அப்போது உறுதியளித்தார்.
இந்திய துருப்புக்களை திரும்பப் பெறுவது குறித்து மாலத்தீவு, இந்தியா பேச்சுவார்த்தை!
மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்ரா எனும் பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்த நிலையில், பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், பாரத் நியாய யாத்ரா நடைபயணமானது ஜனவரி 14ஆம் தேதி (இன்று) தொடங்கி மார்ச் 20ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
சுமார் 6,200 கிமீ கொண்ட இந்த யாத்திரையானது, அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரையை நடைபயணமாகவும், வாகனத்திலும் ராகுல் மேற்கொள்ளவுள்ளார்.