இந்திய துருப்புக்களை திரும்பப் பெறுவது குறித்து மாலத்தீவு, இந்தியா பேச்சுவார்த்தை!

By Manikanda Prabu  |  First Published Jan 14, 2024, 5:37 PM IST

இந்திய துருப்புக்களை திரும்பப் பெறுவது குறித்து மாலத்தீவு, இந்தியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து மாலத்தீவும்m, இந்தியாவும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக இந்திய துருப்புகளை அகற்ற மாலத்தீவுகள் கோரிக்கை விடுத்து வரும்  நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

மாலேவில் உள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சன்ஆன்லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

டிசம்பர் மாதம் துபாயில் நடந்த COP28 மாநாட்டுக்கு இடையே,  மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பின் போது மாலத்தீவுகளும் இந்தியாவும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒப்புக் கொண்டதன் தொடர்ச்சியாக, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் இப்ராஹிம் கலீல் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது குறித்தும், மாலத்தீவில் இந்தியா ஆதரவுடன் கூடிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் உயர்மட்ட குழு ஆலோசித்து வருவதாக இப்ராஹிம் கலீல் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி மாலத்தீவின் அதிபராகப் பதவியேற்ற உடனேயே முகமது முய்சு, இந்தியா தங்களது ராணுவ வீரர்களை தமது நாட்டிலிருந்து திரும்பப் பெறுமாறு முறைப்படி வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கோரிக்கையை முன்வைக்க மாலத்தீவு மக்கள் தனக்கு வலுவான வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர் அப்போது வலியுறுத்தினார்.

அதிபர் முய்சு தலைமையிலான புதிய அரசாங்கம் மாலத்தீவில் அமைந்தவுடன் மாலத்தீவில் 77 இந்திய ராணுவ வீரர்களை நிறுவியுள்ளதாக இதற்கு முன்பு கலீல் தெரிவித்திருந்தார். இந்தியாவுடனான 100க்கும் மேற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களையும் மாலத்தீவு மீண்டும் பகுப்பாய்வு செய்து வருகிறது.

முதல் ஹெலிகாப்டரை நிர்வகிக்க 24 இந்திய ராணுவ வீரர்களும், டோர்னியர் விமானத்தை நிர்வகிக்க 25 இந்தியர்களும், இரண்டாவது ஹெலிகாப்டரை நிர்வகிக்க 26 வீரர்களும், பராமரிப்பு மற்றும் பொறியியலுக்காக மேலும் இருவரும் மாலத்தீவில் இருந்தனர்.

அண்ணாமலை பகல் கனவு காண வேண்டாம்: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் - தமிழக அரசு பதிலடி!

பிரதமர் மோடி லட்சத்தீவு பயணத்துக்கு பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் அவர் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அந்த அமைச்சர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

சீன பயணத்தின் போது, அந்நாட்டுடன் நெருக்கமாக இருக்க மாலத்தீவு அதிபர் முயற்சிகளை மேற்கொண்டார். தங்களது நாட்டுக்கு அதிகமாக சுற்றுலாப்  பயணிகளை அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மாலத்தீவு சுற்றுலாவை பெருமளவு நம்பியிருக்கும் நாடு. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ரஷ்யா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது. சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

click me!