
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவில் பயணித்து வந்த மிக மூத்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல் நல குறைவு காரணமாக இன்று தனது 80வது வயதில் காலமானார். அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது வெளியிட்டுள்ள பதிவில் "மறைந்த நடிகர் டெல்லி கணேஷுடைய இழப்பு மிகப்பெரியது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேடை நாடகங்கள் மீது அதீத அன்பு மற்றும் ஆர்வம் உடையவர் டெல்லி கணேஷ்" என்று கூறி அவருக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார் நரேந்திர மோடி.
அதேபோல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த ஒரு பதிவில் "தன்னுடைய இயல்பான நடிப்பு திறமையால், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை மிக அருமையாக நடித்து உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் பெரிய அளவில் அன்போடு போற்றப்பட்டவர் டெல்லி கணேஷ். அவர் இன்று உடல்நல குறைவால் காலமான செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவருடைய இழப்பில் வாடி வரும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவனின் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன் ஓம் சாந்தி" என்று ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில் "உடல் நல குறைவு காரணமாக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமான செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் அதிகமான திரைப்படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த புகழ் பெற்றவர் அவர். அவருடைய திடீர் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார். டெல்லி கணேஷோடு இணைந்து ஒரு சில திரைப்படங்களில் விஜய் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக மறைந்த டெல்லி கணேஷுக்கு இரங்கல்களையும், அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல்களையும் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் அவரோடு சில திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகர் ரஜினிகாந்த் "என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையான ஒரு மனிதர். அற்புதமான நடிகர், அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
பூ மாலையே முதல்; ஓ மகசீயா வரை - தமிழ் திரையுலகை திருப்பிப்போட்ட வித்யாசமான டாப் 4 பாடல்கள்!